Wednesday, December 24, 2008

இது என்னவென்று உனக்கு தெரியுமா?

சற்றே செறுக்குடனே!  
சமயமும், கலையும் , 
இலக்கியமும், சங்க கால கதைகளும், 
அறிவியலும், புனைவுகளும், 
இயற்கையின் விதிகளையும், 
இன்னும் பலவும்,  

புவியியல் விதி இது, பூளோக பொருள் இது, 
என எங்கே எப்போதோ படித்து 
செரிமாணம் முடியாத தகவலை, 
வரிவரியாய் சொன்னாலும்,  

மாறாத புன்னகையில், 
மறுப்பேதும் சொல்லாமல், 
விருப்போடு கேட்பாயே!  

செறுக்கை கொல்ல
இந்த வழியை எங்கிருந்து நீ அறிந்தாய்?

நெஞ்சுக்கு நீ... தீ...

உலகின் மொழியில் எல்லாம் 
உச்சரிக்க முடியாதது
எனக்கு பரிச்சயமானது..... 
மௌனம்....  

ஓராயிரம் எண்ணங்கள் உளத்தில் எழுந்தாலும், 
மூளைகளின் நரம்பு துடிப்பு உடலில் உணர்ந்தாலும், 
இதயத்தின் இயக்க வேகம், இயல்பை விட அதிர்ந்தாலும், 
வெளிவரும் மூச்சில், வெப்பம் இயைந்தே போனாலும்.....  

பழகிய தாய்மொழியில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. 
உணர்வுகள் மோதுகையில், உதடுகளுக்கு ஒலியில்லை... 
காதல் என்றுதான் இல்லை, கோபம், வெறுமை, இனிமை,  
என பல நிலைகளிலும் நான் ஊமையாகி போகிறேன்...  

ஆனால், நீ.... 
நான் மௌனத்தில் இருந்தாலும், 
என் மனதின் சலனம் எல்லாம், எப்படி அறிந்தாய்?  

என் மன நிலைக்கு ஏற்ப,  
புன்னகைக்கவோ, பரிகாசிக்கவோ, 
பக்கத்தில் அமர்ந்து, கரம் பிடித்து தேற்றவோ, 
துக்கம் ஏற்பட்டால் தூர துரத்தவோ, எப்படி நீ அறிந்தாய்?.  

மௌனத்தில் அமைதியில்லை என, 
மௌனமாய் கற்றுத்தந்தாய்... 
இயல்பின் நான் திரும்பும்போது.. நீ 
இங்கில்லை... எங்கே சென்றாய்?

Tuesday, December 23, 2008

எங்க ஏரியா! உள்ள வரியா!

சென்ற வாரத்தில் கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என ஊர் பெருமையை அழகாக உரைக்கும் பதிவுகளை படிக்க நேர்ந்தது..... .நம்ம சென்னையை பற்றி எந்த பதிவும் கண்ணில் படவில்லை.... பிறந்து, வளர்ந்து, சிரித்து, மகிழ்ந்த ஊரான சென்னையை பற்றி சிலாகிக்கவே இந்த மொக்கைஸ்

நீங்கள் கேட்ட பாடல் ரேஞ்சில் வாரம் ஒரு ஏரியா கவர் பண்ணலாம்னு ஐடியா... . 52 வாரம் ஈசியா ஓட்டிடலாம்லே! பதிவு போட இனிமேலும் மண்டைய குடைய வேண்டாம்....

தொடங்கும் முன் ஒரு டிஸ்கி ;) நிறைய தகவலுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விக்கிபீடியா மற்றும் பிற இணையங்களின் உதவியும் கூகில் ஆண்டவர் அளிக்க பெற்று இந்த பதிவை சுட்டளிக்கிறேன் ;)




இணையத்தில் பழைய சென்னையின் அழகான புகைபடங்கள் நிறைய இருக்கிறது... காப்பிரைட் பயத்தின் காரணமாக... உங்கள் பார்வைக்கு... இந்த லிங்கை க்ளிக்கவும்...





“எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

ஔவையார் பாடியது என நினைக்கிறேன்... இன்றளவும் எந்த ஊருக்கும் பொருந்தும்.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கமின்மை, இலஞ்சம், சாலை விதிகள் மீறல், சுகாதாரமின்மை, மக்கள் தொகை நெருக்கம், மாசு, தூசு, என குறைகள் எத்தனை இருந்தாலும், பல கோடி மக்களுக்கு வாழ்வின் ஆதாரமாக விளங்கி, ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெரும், வாழ்வின் விளக்கமாக சென்னை தோற்றமளிக்கிறது...

இழுவை முடிந்தது.. இனி பதிவிற்கு....

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்போம்.... தொழிற்சாலையின் புகையிலும், ஏழ்மையின் தோற்றத்திலுமே சித்தரிக்கப்படும் வட சென்னை.... வளமான பகுதிகளையும் தன்னிடத்தே கொண்டது.... இங்கு வர்த்தக தொழிற்சாலைகளின் தண்டையார்பேட்டையில் இருந்து, வடக்கில் எண்ணூர் தாண்டி வளர்ந்து கொண்டே வருகிறது...... தியாகராய நகருக்கு அடுத்த படியாக ஜவுளி வாணிகம் நிகழும் வண்ணாரப்பேட்டை... மீன்பிடி துறைமுகம் இருக்கும் காசிநகர் (காசிமேடு)... சரித்திர சுவடுகளை தாங்கி இன்று மங்கி இருக்கும் இராயபுரம்... இரயில் தயாரிக்கும் பெரம்பூர், மற்றும் வளரும் சுற்றுப்புறத்தில், வில்லிவாக்கம் , கொரட்டூர், அண்ணா நகர் ஆகியவற்றை உள்ளடக்கியது....

உயர்நீதி மன்ற வளாகம் தாண்டி, வட சென்னை வர பயப்படும் நண்பர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.... இங்கு மட்டுமே... ஐந்து அடி அகல தெருவில், ஐந்து அடுக்கு மாடிகள் இருக்கும்... இங்கு மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு சிறு தொழில் நடக்கும்.... மாவு அரைத்து விற்பதானாலும், மளிகை பொருட்களை மீண்டும் பாக்கிங் செய்து சில்லரை விற்பனை செய்வதோ.... சாலைக்கு சாலை இருக்கும் பருப்பு ஆலைகளோ, சில்லரை வணிகமோ, இந்த மக்களிடம் வளம் சிறக்க வாழும் ஒரு முனைப்பை வெளிப்படுத்தும்.... ஓரளவில் ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்து உண்டென்றாலும், சென்னையின் எல்லா இடங்களை போலத்தான் இங்கும்... ஆக தலைப்புக்கு விளக்கம் சொல்லியாச்சு...

சமயம், இலக்கியம், சிவப்பு கொடி, அரசியல், , அடி தடி என சினிமா படம் போல எல்லாம் கலந்து இயங்கும் வாழ்க்கை... இரவு 2 மணிக்கு வெளியே சென்றாலும், சாலையில் மக்கள் நடமாட்டம்... காலை 3 மணிக்கெல்லாம் தேனீர் கடையில் கூட்டம்.... என வித்தியாசமான வாழ்க்கை.....

என் நினைவில் 90 களில் நிறைய கவிதை வட்டம், தமிழ் பேரவை கூட்டங்களில் கலந்த நினைவு.... மார்கழி மாதத்தில் எல்லா சபாக்களிலும் 50/100/500 ரூபாய் டிக்கட் என்றால், வட சென்னையில் மட்டும் இலவச இசை நிகழ்ச்சிகள்.... இராசா அண்ணாமலை மன்றமானாலும், கலைஞர்களும் பொதுமக்களோடு அமர்ந்து இசைக்கும் திருஅரங்கப்பெருமாள் கோவில் நிகழ்ச்சியாகட்டும்... இலவசமென்றாலும், இசைக்கும் பஞ்சமில்லை...

சமயம்; வடசென்னையின் திருவொற்றியூர் கோயில் தனிசிறப்பு, திருவொற்றியூரிலேயே வள்ளலார் வளாகம், பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த இடம், கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், மின்ட் அருகில் உள்ள திரு ஏகாம்பரேசுவரர் கோவில், மன்னடி அருகில் இருக்கும் மல்லிகேசுவரர் கோவில், காளிகாம்பாள் கோயில், சென்ன மல்லீசுவரர் கோவில், கந்தகோட்டம் சுப்ரமண்ய சுவாமி கோயில், கச்சலீசுவரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காலத்தீசுவரர் கோவில் என இந்து சமயம் இங்கு இழையோடுகிறது...

மன்னடி மற்றும் முத்தையால்பேட்டை பகுதியில் பழைய கட்டிடங்கள் பலவும் காணலாம்... சென்னையின் முதல் வணிக பொருளாதார வளாகமாக திகழ்ந்த இடம், இன்றும் பல கோடி ரூபாய்களை பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறது....

இராயபுரம் பகுதியில் கிருத்தவ கோயிலான மாதா கோவில் பழமையானது... அதே போன்று, ப்ராட்வே பகுதியில் பல புராதன சர்ச்சுகளும், மசூதிகளும் உண்டு.... மத வேறுபாடு, மத கலவரங்கள் இங்கு அரிது.... அடுத்த வீட்டு நபரின் பெயர் தெரியாத நபர்களின் எண்ணிக்கை வட சென்னையில் மிக குறைவு... ;)

பக்கிங்காம் கால்வாய் என ஒரு காலத்தில் படகு போக்குவரத்திற்கு உதவிய கால்வாயும், கூவத்தின் ஒரு பகுதியும் வட சென்னையில் பாய்கிறது... நம்பிக்கை இருக்கிறது... சில வருடங்களில் மீண்டும் இந்த ஆறுகள் புது உயிர் பெறும் என நம்பிக்கை உள்ளது....

சென்னை கோட்டையில் உள்ள புனித சர்ச்சும், அருங்காட்சியகமும் பார்க்க வேண்டியவை.. ஒரு நகரத்தின் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்துள்ள கோட்டை அருங்காட்சியகம் பலராலும் அறியப்படாமலே இருக்கிறது...

வளம் மிகச்சிறந்து, மக்கள் தொகை நெருக்கத்தால் பொலிவிழந்த வடசென்னை... இப்போது அடுத்த கட்டத்தில் உள்ளது.... பழைய ஆலைகளும், குடோன்களும் இப்போது தங்களிடத்தில் இருக்கும் நிலத்தின் அருமையை உணர்ந்து, குடியிருப்பு பகுதிகளாக மாறி கொண்டு வருகிறது.... பின்னர் வளர்ச்சி அடைந்த இடங்களான பெரம்பூர் முதல் கொரட்டுர் வரையிலான பகுதி ஓரளவிற்கு முறையான வளர்ச்சியின் அடிப்படையில் உள்ளது... எதிர்வரும் ஆண்டுகளில் வடசென்னை மீண்டும் முழு வளம் அடையும் என நம்பிக்கை உண்டு....

நிறைய எழுத நினைத்து, நிறைவில்லாமல் எழுதிவிட்டேன்... மீண்டும் அடுத்த வாரம் மத்திய சென்னையை பார்வையிடலாம்... பின்னூட்ட சூறாவளிகளே... சென்னையின் நினைவில் கும்மி தொடர அழைக்கிறேன்...