Friday, September 28, 2018

சுவர்.

பதிநான்காம் மாடியில், பளிங்கு கண்ணாடி வழியே,
விண்ணுயர்ந்த கட்டிடங்கள்... மெட்ரோ மனிலா... மண்ணிலா? விண்ணிலா?
ஒளி பாய்ச்சும் விளிக்கொளிகள்... வழி எங்கும் விழி ஏங்கும் வாகனங்கள்...

என்றும் பெண்மை பேரழகு, இங்கு அதனில் ஒரு சிறப்பு,
வியப்பெய்யும் வண்ணம், வியர்வையை காணவில்லை,
பூச்சொட்டிய பூ முகங்கள், மணம் வீசும் மங்கையர்கள்,

இங்கு ஆடம்பர கார் மட்டும் அணிவகுக்க,
இரு சக்கர வண்டியின் இதயங்கள்  ஆர்ப்பரிக்க,
இரவும் இளமையும் இண்பத்தால் திளைத்திருக்க...

இங்கு தெருவெல்லாம் திருவிருப்பால்,
குப்பை நான் கண்டதில்லை, சகதி
குட்டையாய் நீர் தேங்கவில்லை,

நடந்து வரும் வழியில், நெடிய ஓர் சுவருண்டு,
விருப்பு வழி கடந்து, விழி சுழற்றி பார்த்தேன்,
மண்ணுடன் வாழும் மக்களும் இங்குண்டு

குப்பை வண்டி மீதிலும் கும்மாளமிடும் ஒரு கூட்டம்,
வெயிலில் வேலை செய்து, வியர்வை சிந்தும் ஒரு கூட்டம்,
உடல் உழைப்பு அன்றி, உடலை விற்கும் ஒரு கூட்டம்.

இரண்டு உலகின் இடைய, மிக பெரிய சுவருண்டு
அதை நான் வியந்தே பார்த்திருந்தேன்...
எட்டடி இருக்கும், அதை தாண்டி அடர் மரங்கள்,

சுவர் உடைந்தால், எல்லாம் சரியாகுமோ?
சுவர் தானே இந்த பாகுபாடு வகுத்தது,
சுவர் சிரித்தது...

சிந்தனை சிறப்பின்றி, மனிதன் மனச்சுவற்றில்,
ஏழ்மையும், தாழ்வையும் தானே செய்திட்டான்,
நிந்தனை எனை செய்ய, நீயா! என்றது போல்

சுவர்...  கண்ணாடியானது