Friday, May 1, 2015

உழைப்பாளர் தினம்

நாட்கூலி, வாரக்கூலி, மாதக்கூலிக்காய்,
 நா தவிக்க, உடல் வியர்க்க, மனம் கருக்க,
நாட்தோறும் நாட்தோறும் உழைத்த கூட்டம்,
  நாதியின்றி நியாயம் சொல்லி வளர்ந்தும் வாட்டம்.

உழைப்பாளர் தினமென ஏனிங்கே வைத்தார்கள்?
   உழைப்பின் ஊதியம், ஊதும் உமித்தோல்.
பிழைக்க தெரிந்தவர் யாரும் இங்கே உழைப்பதில்லை,
   பிறர் உழைப்பினை உறிஞ்சாது தழைப்பவரில்லை.

நீதி நேர்மை நாணயம் என நீளமாய் பேசி,
   வினைத்தூய்மை, கருமம்   என நீட்டிப்பேசி,
முதலாளித்துவத்தின் அடிமட்டத்தின் மட்டத்தில்,
   முனகாது முடியாது முட்டி மோதி,

பல பல பொய் தானே சொல்லி பயின்ற போதும்,
  பலன் இல்லா, பலம் இல்லா உழைக்கும் கூட்டம்,
சல சலக்கும் சத்தமெல்லாம் சரிந்தே போகும்,
   சந்தையின் விந்தையை நோந்தே போகும்.

உழைத்தாலே உயர்வென ஏதும் இல்லை,
   உலக சந்தையில் உண்மையே இல்லை.
வெறும் உழைப்பிற்கும் மேலாய் உனை நீயும் நினை,
   வியர்வைக்கும் மேலே பயன் தரும் வினை.

சாக்கும் போக்கும் சொல்லி சாமாணிய வாழ்வில்
  சாகாடு வரும் வரை, சாமரம் வீசி
போக்கும், வரவும்  சிறு பொருளும் பேசி
   போகிற போக்கில் வாழலாம் அன்றி

இடுக்கண் அழியாமை, ஆள்வினை எல்லாம்,
  உனக்கே பயன்பட்டால் உயர்வே,
படும் பாடு எல்லாம் விழலாய் வீழ்ந்தால்,
  தன்னலம் தவறில்லை காண். 

Tuesday, February 17, 2015

கருப்பு - பகுதி 1

வாட் தி ஃபிஷ் மேன்....  என்னதான் கஸ்டரமரா இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தைகள் வலித்தது.  50 பேர் இருந்த மீட்டிங், எனக்கு காது மடல் சிவந்து, ஜிவ்வென்று சூடேறினாலும், என்னுடைய டீம் செய்த வேலைக்கு அந்த பேச்சையெல்லாம் வாங்கிதான் ஆகனும். ப்ரொடக்ஷன் சேன்ஜ் முடிந்து 5 மணி நேரமாக சிஸ்டம் டமால். 

இந்த சேன்ஜ் ரொம்ப முக்கியமானது. ஒரு பிசிறு கூட தவறு ஏற்பட கூடாது என டி-மைனஸ், செக்லிஸ்ட் எல்லாம் பாத்து பாத்து செஞ்சோம். என்ன மிஸ் ஆச்சுன்னு இது வரைக்கும் புரியவில்லை.  புது ஃபைல்ஸ் போனதும், ஆர்டர் வரவில்லை என தெரிந்த உடன், கஸ்டமர் டைரக்டர், வி. பி எல்லாம் ரோல்பேக், ரோல்பேக் என ஆணையிட, உடனே ரோல் பேக் செய்தோம்.  ரோல்பேக் செய்த பின்னரும் சைட் டவுன், கூடவே சேர்த்து என்னுடைய மானம், மரியாதை, எல்லாமே

இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டோம். முதல் முறையாக முறைக்க கூட முகத்தை பார்க்காமல், வாட்எவர் என எழுந்து சென்றார் என் டைரக்டர். மடி கணினியை திறந்து கடைசி முறையாக முயற்ச்சிப்போம் என பார்த்த போது சட்டனெ மாட்டியது.  கொய்யாலே, இரண்டு டேபில் ப்ரொடக்ஷன்ல காணோம். 

கிணத்தை காணோம்னு வடிவேலு சொல்லும் போது அந்த இன்ஸ்பெக்டர் முழித்தது போல முழித்தேன். ஆடிட் டெரெயில் எடுத்து பாத்தா, நம்ம செல்லாக்குட்டி ஆப்பு ஷோர் .... கோபமாக போன் எடுத்து பேசும் முன்னர், நமக்கு இன்னொரு ஈ-மெயில் - ஸாரி - ப்ரொடக்ஷன் ப்ராப்ளம் பாக்க ட்ரை பண்ணும் போது, டெஸ்ட்க்கு பதிலா ப்ரொடக்ஷன்ல டேபில் டெலிட் செஞ்சிட்டோம்.  டி.பி.ஏ கிட்டி பேசி பேக் அப் எடுத்து போட்டுடங்கன்னு.

வெட்கம் மறைத்து டைரக்டர் அலுவலகம் சென்று, மீண்டும் ஃப் மற்றும் எஸ் வார்த்தைகளை ஏற்று மேலும் 2 மணி நேரத்திற்கு பின்னால் சிஸ்டம் வாஸ் அப் அன்ட் ரன்னிங்.

மென்பொருள் துறையில் இதெல்லாம் சாதாரணம் என என்னுடைய மேனேஜர் புன்னகைத்தார்.  ப்ராஜெக்ட் லீட் பெரிய அப்பாட்டக்கர் மாதிரி எல்லாத்தையும் அடுத்தவனுக்கு கொடுத்து ஓபி அடிக்கிறதை , மாடுல் லீட், சீனியர் டெவலப்பர், ஜீனியர் டெவலப்ப்பர், 2 மாதம் முன்னாடி சேர்ந்தேன் என அனைவரும் வேலையை தள்ளுவதில் திறமையை வளர்த்த அளவுக்கு, கொஞ்சமா சாப்ட்வேர் உருவாக்க திறமையை வளர்த்திருந்தா, நாம எங்கேயோ போயிருப்போம் என அவரையும் மனதில் நினைத்து பொருமினேன்.

சார், அடுத்த மாசம் கல்யாணம், 3 வாரம் லீவ் கேட்டுருந்தேன்... மேனேஜர் புன்னகைத்தார், ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. 2 வாரம் லீவ் எடுத்துக்க. 1 வாரம் ஆப்ஷோர் ஆபிஸ் போய் நம்ம டீமுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடு. உன் டைரக்டர் கன்சர்ன் சென்னார், அவங்க விசிபிலிடி வரது உன்னோட முக்கிய பொறுப்பு என்றார்.

இந்தியாவில் ஒரு மாசம் இருந்தா நல்லாதான் இருக்கும். ஊர விட்டு வந்து 5 வருஷம் ஆகுது.  நரேன்... (நரேந்திரன்)  ஒரு வாரம் ட்ரையினிங் வில் நாட் பி குட் . அடுத்த ரிலீஸ் வரைக்கும் நான் அவங்கள ட்ரெயின் பண்ணி ஒரு ரிலீஸை அங்க இருந்தே ரன் பண்ணா கஸ்டமர் கான்பிடன்ஸ் இம்பரூவ் ஆகுமே.  யோசிச்சு பாருங்களேன் என்றேன். 

நல்ல ஐடியா... பில்லிங் அடி வாங்குமே...  நான் கஸ்டமர் சைட் பேசி பாக்குறேன் என்றான் நரேன்.
அடுத்த நாள் அழைப்பு வந்தது... ஆல் அப்ரூவ்டு. 3 மாசம் இந்தியா ஆபிஸ்ல இருந்து வேலை செய்யலாம். அடுத்த ரிலீஸ் ரொம்ப க்ரிட்டிகல், “I want you to make a difference to the customer with improved perception about the offshore team.”  

செஞ்சிடுவோம் நரேன் ...


எமிரேட்ஸ் விமானம், அடுத்த 20 மணி நேரத்தில் இந்தியா.  ஐந்தாண்டு கழித்து மீண்டும் தாய்நாட்டிற்கு பயணம். 'உனக்கென வேணும் சொல்லு' விழி மூடியது.

Monday, February 16, 2015

தோழி

குனித்த புருவமும், கொவ்வை செவ்வாய் குமிழ் சிரிப்பும்,
எனது ஐயனுக்கு மட்டுமில்லை, தோழிக்கும் உண்டு,
கனிவின் மனம் உண்டு. கள்ளமில்லை. பிறர் மனம்
மகிழ உளம் உண்டு.  மாசில்லை. தோழி நீ வாழி.

தனக்கென வேண்டுதல் அவா. பிறர்கென எண்ணுதல் அன்பு,
உதடுகள் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தையும், எதிர்
உள்ளவர் உள்ளம் களிக்க வைப்பதால், அன்பினை 
அலைபரப்பும் அலைவரிசை நீ. தோழி நீ வாழீ.


உவப்ப தலைகூடல், உள்ள பிரிதல் 
கலைஞருக்கு மட்டுமில்லை, கணினியருக்கும் தான்,
உடன் இருந்த நாட்கள், உவகை உவக்கும்
உலகை சுருக்க மனம் நினைக்கும். 


மாய மந்திர மோதிரம் இருந்திருந்தால், 
கூடு பாயும் கலை நான் அறிந்திருந்தால்,
வெட்டியாய் இருக்கும் நேரமெல்லாம், உங்கள் 
பக்கத்திலே வந்து கதை அளந்திருப்பேன். 


அண்மையில் இல்லாதவரை மறப்பது இயல்பென்பர்,
நுண்மையின் நினைவினில் அன்பினை பகிர்ந்தீர்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினாய்,
தோழீ நீ வாழீ. 

Wednesday, January 18, 2012

காதலினால் மானுடர்க்கு கவிதை தோன்றும்

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்

உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
நான் என்றும் சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


இப்படி ஒரு காதல் என்றால்
எப்படி என யாரறிவார்
இதயம் வலிக்கும் இன்பம்
மெதுவாக சொன்னது பார்

அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை
அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


இருள் மாய்ந்து ஒளி வரும்போதும்
ஒளி தேய்ந்து இருள் வந்தாலும்,
ஒன்றேதான் என் ஆசை
என்னருகே நீதான் வேண்டும்

என் காதல் அது என்று கைகூடுமோ?
என் காதல் அது என்று கைகூடுமோ?

என் கனவினில் இனி வண்ணம் பல மாறும்
நான் உண்மை சொன்னேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன்மேல் ஆணை செய்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


என் கனவிலும்
என் மூச்சிலும்
என் உயிரிலும்
உன் நினைவே நினைவே

அதி காலையும்
மதி இரவிலும்
விழி முழுவதும்
உன் முகமே முகமே


உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்

Saturday, May 8, 2010

பிரிவு கொடியது...

அப்பா... நான் பவர் பஞ்ச் அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க... என்ற படி “கிங் கமஹமேஹா பஞ்ச்” என உரத்த குரலில் வயிற்றில் ஓங்கி அடித்தான்.... (இது dragon balls பார்க்கிறவர்களுக்கு புரியும் ;-) ) நான் வயிற்றை கொஞ்சம் இறுக்குவதற்கு முன்னால் அடித்ததால் சரி வலி.... டிஸ்னி எக்ஸ். டி... கார்ட்டூன் நெட்வோர்க் எல்லாம் சேர்ந்து ஆதித்தியனை கொஞ்சம் வன்முறை பிரியனாக மாற்றியுள்ளது.

தினமும் தூங்கும் போது, அவன் கைகளின் நான் படுத்துக்கொள்ள வேண்டும்.... நான் படுக்கையறை வரும்போதே, யெஸ... கழுத்து வந்தாச்சு, இனிமே தூங்கலாம் என்று கூதூகலிப்பான்.... என் கழுத்தை சுற்றி அவன் கைகளை இறுக்கித்தான் தூங்குவான்.... போதுமான கதகதப்பு இல்லையென்றால், முட்டியால் மோதி, பலவாறும் அட்ஜஸ்ட் செய்து என்னை பொம்மை போல் மாற்றுவான்.... பல நாட்கள் சலிப்படைவேன்... ஆதி... ரொம்ப டயர்டா இருக்கு.. ப்ளீஸ் வேண்டாம் என்று கொஞ்சினாலும் விடமாட்டான்...

ரிப்பீட்டேய் கேம் வேறு.... எதை சொன்னாலும் அப்படியே திரும்ப திரும்ப சொல்லுவான்... கடைசியில் வான் சிறப்பு தான் என்னை காப்பாற்றும்... துப்பார்க்கு துப்பாய... குறள் சொல்லி நான் ஜெயிப்பேன்...அவனும் தூப்பாக்கு... என துவங்கி அதே நடையில் வார்த்தைகளை மாற்றி Cheating Cheating என்று சண்டைக்கு வருவான்...

டி.வி பார்க்க விடமாட்டான்... அவன் சாப்பிடும் போது அவன் ப்ரோக்ராம் தான் பார்க்க வேண்டுமாம்.... நான் ரிமோட் கன்ட்ரோல் எடுத்தால் அவன் முகம் சோகமாகி விடும்.... ஒரு கொட்டு வைத்துவிட்டு ரிமோட்டை அவனிடமே கொடுத்து விடுவேன்....

வெளியே சென்றால் இன்னும் தூக்கி செல்ல வேண்டும் என்று அவ்வப்போது அடம் பிடிப்பான்.... வளந்துட்டடா... இனிமே உன்னை தூக்க முடியாது என்று சொன்னாலும், அவனை தலை மேல் தூக்கி உட்கார வைத்து செல்வதில் எனக்ககும் ஒரு மகிழ்ச்சிதான்... முதுகு வலி இருந்தாலும், அவனை தூக்கி கொண்டு சண்டை போடுவேன்...

.கோடை விடுமுறையில் அவன் நண்பர் பலரும் ஊருக்கு சென்றதாக பல நாள் பேசியுள்ளான்... என்னால் முடிந்த்து... விடுமுறை நாளில் மட்டும்,சுற்றமும் நட்பும், சுற்றி காணலும் காட்டினேன்... சென்ற வாரம் உறவினர் சிலர் பெங்களூரு செல்வதாக கூறியிருந்தனர்... ஆதி வயதின் இரு சிறுவரும் அங்கு செல்வதாக இருந்தது... 4 நாட்களாக ஆதித்தியன் தானும் பெங்களூரு செல்வதாகவும், தான் வளர்ந்து விட்டதாகவும், பாட்டியிடம் பத்திரமாக இருப்பேன் என பலவும் கூறி எங்களிடம் அனுமதி பெற்றுவிட்டான்... நேற்று இரவு அவனை காவேரி எக்ஸ்பெரஸ் இரயில் ஏற்றி வழியனுப்பினோம்...

திரும்ப வரும் போது, ஹாட் சிப்ஸில் மசாலா பால் குடிக்க நானும், துணைவியாரும் அமர்ந்தோம்...இருவருக்கும் கண் கலங்கியிருந்தது.... அதிகம் பேச முடியவில்லை... என்றோ ஒரு நாள், கல்வி என்றோ, வேலை என்றோ என்னை விட்டு பிரிவானோ என்று ஏதோ ஒரு எண்ணம்..... மன அழுத்தம்...

காலை முதல் நேரத்தை எப்படிகழிப்பது என தெரியவில்லை..... நண்பர்களின் ப்ளாக் பக்கங்கள், பிடித்த இணையங்கள்... பிக்காஸா புகைப்படங்கள் என இணையத்தை பல மணி நேரம் பார்த்தாகி விட்டது.... டி.வி பிடிக்கவில்லை.... தூங்கவும் பிடிக்கவில்லை...ஒரு வருடமாக எட்டிப்பார்க்காத என் கிறுக்கல் பக்கங்களில் இன்று கிறுக்கவைத்து விட்டான்.


Monday, January 26, 2009

சிதறல்

இதோ தொடு வானில்

வெளிச்சப்பெட்டிக்குள்  கரையான் ஓட்டை போல்

மொத்த வெளிச்சத்தையும்  கீற்றாக்கி மின்னியது..

கரிய கடல் பரப்பில்  வெள்ளி பாதை போட்டது...

 

உற்று பார்க்கிறேன், மேலும் பல நட்சத்திரங்கள்,

மேலும் பார்த்தால், மேலும் பல நூறு,

உரைக்க முடியாத வியப்பு,

நட்சத்திரங்களின்  மக்கள் தொகை 

நேற்று முதல் பெருகியதோ..!

 

வாழ்வாங்கு வாழ்ந்தவர் 

உலகை நீத்த பின்னர்

வின்மீனாகி வின்னகரம் அடைவாராம்,

இங்கும் விதி விலக்கு இருக்குமோ!


செல்வாக்கு இருந்தால், 

வின்மீன் பட்டாவும்

விலைக்கு கிடைக்குமோ!

இருக்கும்... இல்லை என்றால் 

இத்தனை வின்மீன்கள் எங்கிருந்து முளைத்திருக்கும்.

 

இப்படி எல்லாம் சிதறி விழும் எண்ணங்கள்

சிதறி விழும் எண்ணங்களில்,

வலுவாய் ஒரு எண்ணம்...

 

பிரபஞ்சத்தில் ஆயிரம் கோள்களாம்,

பிரபஞ்சத்தை தாண்டி  பல்லாயிரம் பிரபஞ்சகளாம்...

 

இந்த நட்சத்திரம்  இத்தனை ஒளி ஆண்டுகள்

தாண்டி இந்நிலையில்  இருக்கிறதாம்.

அந்த நட்சத்திரங்களுக்கும்  வாழ்வு உண்டாம்...

இன்னும் சில ஆயிரம்  ஒளி ஆண்டுகளின் பின்னால் மாண்டு போகுமாம்!

 

ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒளி வீச காரணமாம்..

அவற்றின் வடிவம் பெரிதானால் வாழ்க்கை சிரிதாகும்,

விக்கிபீடியாவும்,  அரை வேக்காடு புத்தக அறிவும்,

வேண்டாமல் வந்ததும்  வியப்பெல்லாம் சிதறியது...

 

இன்றும் இருண்ட வானில்

நட்சத்திரங்களை பார்க்கிறேன்...

இருபது வருடத்திற்கு  முன்னால்

இனம் புரியா மகிழ்ச்சி  இன்றில்லை...

 

எல்லா புரிதல்களும்

பலன் அளிப்பதில்லை...

இதோ அடுத்து விக்கிபீடியாவில்,

அலை எழுவது எப்படி  என படிக்க விழைகிறேன்...