Saturday, May 8, 2010

பிரிவு கொடியது...

அப்பா... நான் பவர் பஞ்ச் அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க... என்ற படி கிங் கமஹமேஹா பஞ்ச் என உரத்த குரலில் வயிற்றில் ஓங்கி அடித்தான்.... (இது dragon balls பார்க்கிறவர்களுக்கு புரியும் ;-) ) நான் வயிற்றை கொஞ்சம் இறுக்குவதற்கு முன்னால் அடித்ததால் சரி வலி.... டிஸ்னி எக்ஸ். டி... கார்ட்டூன் நெட்வோர்க் எல்லாம் சேர்ந்து ஆதித்தியனை கொஞ்சம் வன்முறை பிரியனாக மாற்றியுள்ளது.

தினமும் தூங்கும் போது, அவன் கைகளின் நான் படுத்துக்கொள்ள வேண்டும்.... நான் படுக்கையறை வரும்போதே, யெஸ... கழுத்து வந்தாச்சு, இனிமே தூங்கலாம் என்று கூதூகலிப்பான்.... என் கழுத்தை சுற்றி அவன் கைகளை இறுக்கித்தான் தூங்குவான்.... போதுமான கதகதப்பு இல்லையென்றால், முட்டியால் மோதி, பலவாறும் அட்ஜஸ்ட் செய்து என்னை பொம்மை போல் மாற்றுவான்.... பல நாட்கள் சலிப்படைவேன்... ஆதி... ரொம்ப டயர்டா இருக்கு.. ப்ளீஸ் வேண்டாம் என்று கொஞ்சினாலும் விடமாட்டான்...

ரிப்பீட்டேய் கேம் வேறு.... எதை சொன்னாலும் அப்படியே திரும்ப திரும்ப சொல்லுவான்... கடைசியில் வான் சிறப்பு தான் என்னை காப்பாற்றும்... துப்பார்க்கு துப்பாய... குறள் சொல்லி நான் ஜெயிப்பேன்...அவனும் தூப்பாக்கு... என துவங்கி அதே நடையில் வார்த்தைகளை மாற்றி Cheating Cheating என்று சண்டைக்கு வருவான்...

டி.வி பார்க்க விடமாட்டான்... அவன் சாப்பிடும் போது அவன் ப்ரோக்ராம் தான் பார்க்க வேண்டுமாம்.... நான் ரிமோட் கன்ட்ரோல் எடுத்தால் அவன் முகம் சோகமாகி விடும்.... ஒரு கொட்டு வைத்துவிட்டு ரிமோட்டை அவனிடமே கொடுத்து விடுவேன்....

வெளியே சென்றால் இன்னும் தூக்கி செல்ல வேண்டும் என்று அவ்வப்போது அடம் பிடிப்பான்.... வளந்துட்டடா... இனிமே உன்னை தூக்க முடியாது என்று சொன்னாலும், அவனை தலை மேல் தூக்கி உட்கார வைத்து செல்வதில் எனக்ககும் ஒரு மகிழ்ச்சிதான்... முதுகு வலி இருந்தாலும், அவனை தூக்கி கொண்டு சண்டை போடுவேன்...

.கோடை விடுமுறையில் அவன் நண்பர் பலரும் ஊருக்கு சென்றதாக பல நாள் பேசியுள்ளான்... என்னால் முடிந்த்து... விடுமுறை நாளில் மட்டும்,சுற்றமும் நட்பும், சுற்றி காணலும் காட்டினேன்... சென்ற வாரம் உறவினர் சிலர் பெங்களூரு செல்வதாக கூறியிருந்தனர்... ஆதி வயதின் இரு சிறுவரும் அங்கு செல்வதாக இருந்தது... 4 நாட்களாக ஆதித்தியன் தானும் பெங்களூரு செல்வதாகவும், தான் வளர்ந்து விட்டதாகவும், பாட்டியிடம் பத்திரமாக இருப்பேன் என பலவும் கூறி எங்களிடம் அனுமதி பெற்றுவிட்டான்... நேற்று இரவு அவனை காவேரி எக்ஸ்பெரஸ் இரயில் ஏற்றி வழியனுப்பினோம்...

திரும்ப வரும் போது, ஹாட் சிப்ஸில் மசாலா பால் குடிக்க நானும், துணைவியாரும் அமர்ந்தோம்...இருவருக்கும் கண் கலங்கியிருந்தது.... அதிகம் பேச முடியவில்லை... என்றோ ஒரு நாள், கல்வி என்றோ, வேலை என்றோ என்னை விட்டு பிரிவானோ என்று ஏதோ ஒரு எண்ணம்..... மன அழுத்தம்...

காலை முதல் நேரத்தை எப்படிகழிப்பது என தெரியவில்லை..... நண்பர்களின் ப்ளாக் பக்கங்கள், பிடித்த இணையங்கள்... பிக்காஸா புகைப்படங்கள் என இணையத்தை பல மணி நேரம் பார்த்தாகி விட்டது.... டி.வி பிடிக்கவில்லை.... தூங்கவும் பிடிக்கவில்லை...ஒரு வருடமாக எட்டிப்பார்க்காத என் கிறுக்கல் பக்கங்களில் இன்று கிறுக்கவைத்து விட்டான்.