Wednesday, November 26, 2008

சுவையார்வம்!

என்னையும் ஒரு இணைய எலக்கியவாதியா நினைச்சு தொடர் விளையாட்டுக்கெல்லாம் அன்போட கூப்ட விக்கி அண்ணாச்சிக்கு (விக்கி... நான் அப்படியெல்லாம் நினைக்கலன்னு பின்னூட்டத்துல போடாதீங்க) நன்றி....


1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?

நினைவில் இருப்பது, அம்புலிமாமா, கோகுலம் மற்றும் Twinkle தான்... ஆரம்ப பள்ளி காலங்களில் இருந்தே (4 அல்லது 5ஆவது வகுப்பு முதல்) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் விடுமுறை நாட்கள் செலவிடப்படும். அங்கு சில ஆண்டுகள் சிறுவர் நூலகத்திலும், பல ஆண்டுகள் சிறுகதை, நாவல், நவீனம் பகுதியிலும் முழு நாளையும் செலவாக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டேன் ;)) ... என்னுடைய தந்தையார் அதே கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய ஒன்றுதான் காரணம்... பின்னாளில் அதே அலுவலகத்தின் பின்னால் இருக்கும் British Council Library கொஞ்சம் படிக்க வைத்தது
ஆனால் இன்றைக்கும் கூட, நக்கீரன் அல்லது குமுதம் படிப்பதை விட கோகுலம் படித்தால் நலன் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...

2)அறிமுகமான முதல் புத்தகம்

திருக்குறளும், திருவாசகமும், வீட்டில் கட்டாய பாடமாக்கப்பட்டது... அவைதான், குறிப்பாக திருக்குறள்தான் முதல் அறிமுகம் என நினைக்கிறேன்….. அதை தவிர்த்து முதலில் புரிந்து, உணர்ந்து அனுபவித்த புத்தகமாக நினைவில் இருப்பது, “புலவர் மகன்”, பூவண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.. அதே போல அறிவியல் புனைவு கதைகளாக மிட்டாய் பாப்பா.... முதல் துவங்கி முல்லா கதைகள், பீர்பால், புத்த ஜாதக கதைகள், மரியாதை இராமன், சிறுவர் கதைகள் என ரொம்ப காலத்துக்கு ச்ச்சின்ன புள்ள தனமாவே என்னுடைய புத்தக ஆர்வம் இருந்தது (கல்லூரி காலத்தில் கூட கோகுலம் படிப்பேன் ... ;))

நியூ சென்சுரி புக் ஹவுஸ் என சாலையெங்கும் புத்தக கடைகளை பார்த்த காலமும் உண்டு... ருஷ்ய மொழியாக்கள் நிறைய படிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது... தி மாபின் சிபிரியாக் தன் மகளுக்கு சொன்ன கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது...

கோகுலம், அம்புலிமாமா, சிறுவர் மலர், Twinkle, கல்கண்டு, மஞ்சரி, கல்கி, குமுதம், விகடன், ஜூ.வி. வார மலர், வள்ளுவர் வழி, முகம், சித்தாந்தம், இராம கிருஷ்ண விஜயம், Divine Life, இந்தியா டுடே, competition success review, Sputnik, Readers digest, National geographic collection, என வேறுபாடே இல்லாமல் அனைத்தையும் ஆர்வத்துடன் நுனிப்புல் மேய்வேன்...

கொஞ்சமாக தமிழ் இலக்கியங்கள் (சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருமுருகாற்றுப்படையும், கம்பராமாயணமும் ஸ்பெஷல்)... மற்றும் மு.வ எழுதிய புத்தகங்கள், விவேகானந்தரின் தொகுப்பாகிய ஞான தீபம், கண்ணதாசன் அவர்களின் புத்தகங்கள், என நிறைய மேய்ந்திருக்கிறேன்... வீட்டில் அன்னை நூலகம் என என்னுடைய தந்தையார் ஒரு மினி-புத்தக நிலையத்தை வைத்து, படிப்பதை ஊக்கப்படுத்தியதாலேயே... இத்தனை அறிமுகங்களும் கிடைத்தது...


3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
பள்ளியில் தமிழ் பாடங்களை உரக்க படிக்கும் வேலை அவ்வப்போது எனக்கு அளிக்கப்படும்... புத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்போம். (ஃபிலிம் காட்டுறதுதான்...) தமிழ் ஆசிரியர் புன்னகைப்பார்.. ஆனால் திட்டியதில்லை.... பி.கு கல்லூரியில் வகுப்பில் தூங்கி மாட்டியதும், எம்.பி.ஏ Operations Research வகுப்பில் டிக் டேக் டோ விலையாடி மாட்டியதும் என்னுடைய சரித்திரத்தில் சாகச கோடுகள்.. ;)
ரொம்ப்பப்பப பயந்த சுபாவம்ங்கோ...

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
படிக்கும் பழக்கம் இருந்தது... க.பி படிப்பெல்லாம் மூட்டை கட்டி வெச்சாச்சு...
பி.கு... எங்க வீட்டு தங்கமணி என்னோட ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க ;))

Tuesday, November 18, 2008

விட்றா விட்றா... சூ னா பா னா

மதிப்பிற்குரிய தமிழா!
தமிழினத்தில் பிறந்த தவறாலேயே
தவறாமல் நீ ஏசப்படுகிறாய்,

இங்கு மட்டுமே, ஜாதி எதிர்ப்பாளர்கள்,
ஜாதியை பேசி பழிதீர்ப்பார்கள்,
நீ எந்த குலத்தை சேர்ந்தவனானாலும்
ஏசப்படுவது உறுதி

இங்கு மட்டுமே, ஐ. டி துறையா அறிவிலி என
செய்யும் தொழிலால் கூட வேற்றுமை பார்ப்பார்கள்
நீ எந்த தொழில் செய்துவந்தாலும்,
இகழப்படுவது உறுதி

அறிவியல் ஆகினும், ஆன்மீகம் ஆயினும்,
புரிதல் இன்றியே பிதற்றி பழிப்பார்கள்,
நீ ஆன்மீகத்தில் இருந்தாலும், அன்பு நிலையில் இருந்தாலும்,
மனிதபண்புகளை மட்டும் மதிக்க கற்றிருந்தாலும்
பழிக்க ஒரு கூட்டம் வழி மீது காத்திருக்கும்

சமூகத்தில் சிரித்து பழகுவாயா? சிந்தனையில் உணர்ந்திடுவாயா?
பொறுப்பற்றவன் என்றோ, பைத்தியம் என்றோ,
சந்தி முனையில் ஒரு கூட்டம் கட்டாயம் கருத்துரைக்கும்

ஆண் பெண்ணிடமோ, பெண் ஒருத்தி ஆணிடமோ,
அதை தவிற வேறோன்றும் செய்ய முடியாது,
என அறுதியிட்டு அறிந்து வைத்துள்ள ஒரு சமூகம்.
திரையில் காதல் என்றால், திகட்ட விசிலடித்து,
நண்பன் நட்பை கூட கொச்சையாய் பேசிடும்.

இங்கு சமூக வாழ்க்கை என்பது,
அடுத்தவர் பற்றிய கருத்துக்கள்,
தனி நபர் கருத்து சுதந்திரம் என்பது,
நாகாரீகம் தாண்டிய உரிமை

ஊடகங்கள் ஒவ்வொன்றிலும்,
உதவாத தகவல்கள்,
இன்னும் நிறைய...
எனக்கும் குறை காண்பது எளிதாகவே உள்ளது

எல்லா சமூகத்திலும் நன்றும் தீமையும்,
எப்போதும் கலந்திருக்கும் இது நீதி என்றாலும்,

ஈழத்தில் படுகொலையா... முதுகெலும்பில்லாத தமிழா
சட்ட கல்லூரி தாக்குதலா.... அறிவில்லாத தமிழா...
மின்சார வெட்டா... மூளையில்லாத தமிழா..
அடுத்த ஆட்சிக்கு யார் வந்தாலும்,... ஆண்மையில்லாத தமிழா

வசவுகளை கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கான தீர்வு என்னிடம் இல்லை...
ஆனால் நம்பிக்கை உள்ளது,
பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து,
இது பழகிபோய்விடும் என்று...