Tuesday, September 30, 2008

அந்த நாள் ஞாபகம்

மெல்லிய மழை... மேகத்தின் ஊடே வெயில்,
தெள்ளிய நீர்நிலை... சிலிர்க்க தென்றல்,
வேகமாய் பயணத்தில் முகம் எதிர்க்கும் காற்று,
மட்டவிழ்ந்த மலர்கள், பறவைகளின் பாட்டு,

வட்ட முழுநிலா, வண்ணங்களில் மேகம்,
நெட்டயெழும் மரங்கள், நீலத்தில் வெறும் வானம்,
கிட்டே வந்து திரும்பியோடும் வெள்ளை நுரை கடலலைகள்
நட்ட நடு நசியில் கண் சிமிட்டும் தாரகைகள்...

எத்தனை முறையேனும் நான்
எண்ணியெண்ணி பார்த்தாலும்,
முத்தான உன் புன்னகைக்கு,
ஒப்புமையாய் ஏதுமில்லை..

டபுள் மீனிங்....

இருப்பது போல் இருந்தாலும்,
இல்லையோ என ஐயம் தரும்
மறுப்பது போல் முயன்றாலும்,
இருக்கிறதென ஐயம் தரும்

நினைவில் தரும் உவகை
நித்தம் நினைக்க தவிக்கும்,
வினை மாற, கவலை
பித்தம் பிடிக்க வைக்கும்.

அறிதலும், புரிதலும்,
அருகிலும் வாய்க்காமல்,
அறிவினால் சிந்தித்தால்,
அபத்தாமாய் சிரிக்கவைக்கும்...

புரியாது என்றாலும்,
புவி முழுதும் ஈர்க்கவைக்கும்,
காதலும் கடவுளும்,
கவி எழுத வைத்திடும்.

Thursday, September 25, 2008

2008 முடிய இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்!

அவன் பேச்சும், புன்னகையும்,
மென் விரல்கள் தீண்டுதலும்,
நெற்றியில் முட்டுவதும்,
ஈரமுத்தம் வார்ப்பதிலும்...

ஹை ஃபெவ் அடித்து,
ஹக் செய்த காலங்களும்.
ஐஸ் க்ரீமும், இனிப்புகளும்,
உன் கண்ணில் காட்டும் உவகையும்,

என்னை போல நடனம் ஆடி,
இயல்பில் சிரிக்கும் சிரிப்பையும்,
உன்னை பிரிந்து வெளியே சென்றால்
உடன் நான் வரவா என்ற குழைவும்

இன்னும் மூன்று மாதங்கள்...
மிகத்தொலைவில் இருக்கிறது...

காலம் என்றுமே இப்படித்தான்
நீடிக்க விரும்பும் போது,
நிமிடமாய் நெகிழ்விக்கும்....
விரைவாய் விரும்பும் போது
மெதுவாய் பயணிக்கும்.

Wednesday, September 10, 2008

ஒவ்வொரு விநாடியும்

எதற்கென புரியாமல்,
ஏனென்ற தெளிவில்லாமல்,
ஏதோ ஒன்றை நோக்கி,
எழுகின்றேன்... விழுகின்றேன்...

வீட்டுக்கடன், வரவு செலவு,
வருமான வரி, வராத கடன்,
காசோலை, போன வழி வந்ததால்,
தேவையில்லாமல் அழிந்த ரூபாய் ஆயிரம்.
வணிக சந்தை எப்போது உயரும்,
விட்ட பணத்தை எடுக்க வேண்டும்.
நான் முதலீடு செய்யும் போது மட்டும்,
ஏன் பொருளாதாரம் நடுங்க வேண்டும்?..

காலிங் கார்டு செலவு மட்டும் மாதம் 40 டாலரா?
காபி குடித்த செலவு மட்டும் 50 டாலரா?
வால்மார்ட்டில் வாங்கலாமா? சாம்ஸில் வாங்கலாமா?
44 களில் பணம் இருக்குமா? இன்னும் உயருமா?

எதிர்பார்த்த லாபம் இல்லாததால்
சம்பள உயர்வு குறைவாகத்தான் இருக்குமாம்....
என்னுடைய உழைப்பிற்கு மணி நேரத்திற்கு 70 டாலர் வாங்கி கொண்டுதானே இருக்கிறார்கள்!

சென்னைக்கு செல்ல வேண்டும்..
இட்லி சாம்பார் சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆனது,
வேக வைத்த பருப்பை பார்த்தால் ஏனோ கோபம் வருகிறது....
மாத வருமானம் பாதியாய் குறையுமே!
பரவாயில்லை... வேண்டாம்.....
பருப்பு வேண்டாமென்றால், பர்கர் இருக்கிறது....

செலவு கணக்கு பார்க்காத நான் சில நேரம்
சில்லரை கணக்கு பார்க்கும் போது....
ஒவ்வொரு விநாடியும் என்னை தொலைத்து....

Thursday, September 4, 2008

சைக்கிள்

ஹயர் சைக்கிள் னு ஒரு கான்சப்ட்... அதெல்லாம் அப்போ... 15 வருஷம் இருக்கும்.... 1 ரூபா கொடுத்தா ஒரு மணி நேரம்... சின்னதா அரை சைக்கிள், முக்கால் சைக்கிள் னு நிறைய வகைகள்.... அம்மா கிட்ட ரொம்ப அடம் பிடிச்சு வாரம் ஒரு மணி நேரம் சைக்கிள் மிதிப்பதில் எவ்வளவு குஜால்ஸ் அப்படிங்கறது.... அனுபவிச்சாதான் தெரியும்... ;)

சொந்தமா சைக்கிள் வேணும் னு ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆகும் ... என்ன ஆறாவது இல்லன்னா ஏழாவது வகுப்பில் இருந்திருப்பேன்... அப்போ சாலிடர் னு ஒரு டி. வி. மாடல்... ரெண்டு பக்கமும் இழுத்து மூடுறா மாதிரி ஷட்டர் எல்லாம் இருக்கும் ;) பி. எஸ். ஏ ஒரு முக்கா சைக்கிள் விளம்பரம் வந்தா என்னையும் அறியாம அப்படியே கண்ணுல இருந்து கண்ணீர் வந்திடும்... இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் தாங்க முடியாம அம்மா எனக்கு சைக்கிள் ஆசிர்வாதம் அளித்தார்...

அம்மா பள்ளியில் வேலை செய்யும் முரளி அண்ணா அடையாரில் இருந்து சைக்கிளை தண்டையார்பேட்டை வீடு வரை சைக்கிளை மிதித்து எடுத்து வந்து விட்டார்... ஆர்வமாக ஓடி சென்று பார்த்தால்... பல்ப்... அது முக்கால் சைக்கிள் தான்... ஆனா லேடீஸ் சைக்கிள்...

செகண்ட் ஹாண்ட் தான்... கொஞ்ச நாள் இது ஓட்டிக்கோ... அப்புறமா பெரிய சைக்கிள் வாங்கிடலாம் னு ஒரு அட்வைஸ் வேற... கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் இருந்தாலும், ஏதோ சைக்கிள் கிடைத்த சந்தோஷம்....கொஞ்ச நாள்... தினசரி க்ளீனிங்.. ஆய்லிங்... வாஷிங் எல்லாம் முடிச்சு.... பாத்துக்குட்டேன்... நாங்க சைக்கிள் வெறியரா இருந்த காலம் கூட உண்டு... 40 கி. மி ஸ்பீட் ரொம்ப சாதாரணம்... நின்னுட்டே வேகமா மெதிக்கிறது, கட் அடிக்கிறது.. முன்னாடி ப்ரேக் பிடிச்சு, பின் டயரை தேய்க்கிறது, இத மாதிரி நிறைய ஸ்டன்ட் காட்டி, (நிறைய சில்லரை வாரியது வேற மாட்டர்) திட்டு வாங்கிருக்கோம்


இருந்தாலும், ஒரு கியர் வச்ச ஸ்போர்ட்ஸ் சைக்கிள் நீண்ட நாள் கனவாக மனதில் எப்போதும் இருந்தது... கடைக்கு போகும் போது, கமிஷன் 2 ரூபாய், மளிகை வாங்கி வந்தால் 5 ரூபாய், சுண்ணாம்பு அடித்தால் 100 ரூபாய், சுற்றத்தினர் வீட்டிற்கு வந்தால், வேணாம் வேணாம்னு சொல்லி வாங்கிய சில பல காந்தி தாத்தாக்கள்... எல்லாம் சேர்ந்து ஒரு 1000 ரூபாய் தேரியது....

ப்ராட்வே பக்கத்துல சைக்கிள் வாங்கிடுவாம்னு... அப்பாவை அழைத்துக்கொண்டு சைக்கிள் வாங்கப்போனோம்.... கியர் சைக்கிள் எல்லாம் வேணாம்.. பாரு டயர் சின்னதா இருக்கு.... பின்னாடி கேரியர் இல்ல... BSA Deluxe முழு சைக்கிள் வட்டமிடப்பட்டது.... பெரிய கேரியர் இருந்தா நிறைய லக்கேஜ் கட்டலாம், தெய்வமே... பெரிய கேரியரா! நல்ல வேளை... ஸ்டாக் இல்லாததால் சாதாரண கேரியர்... புது சைக்கிள் கலக்கியது.... ஒரே நாளில் பீச் ரோடு முழுக்க முடித்து , மவுண்ட் ரோடில் ரிடர்ன் வந்த நாளெல்லாம் உண்டு. வேகமாக போகும் பஸ், ஆட்டோ, எல்லாத்தையும் ரைட் ஹாண்டில் ஓவர்டேக் பண்ணி... தேவையே இல்லாமல், யாரிடமெல்லாமோ திட்டு வாங்கியதுண்டு... ப்ரேக் கட்டை மாற்றுவது, அட்ஜஸ்ட் பண்ணுவது, இதெல்லாம் பெரிய இஞ்சினியரிங் சாகசம் போல லுக் விடுவது.... அது ஒரு அழகிய சைக்கிள் காலம்... ;)

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, ஒரு நாள் நான் அடிக்கடி வரும் மலேரியாவில் காய்ச்சலாக வீட்டில் படுத்திருந்தேன்... பெல் அடித்த ஒரு நல்ல மனிதர்... உங்க அப்பா பேரு அரிஹரனா? அவருக்கு LIC ல இருந்து ஒரு செக் வந்திருக்கு, கொரியர் (courier) ஆபிஸ்க்கு வந்து வாங்கிக்கோங்க அப்படின்னு சொன்னார். வீட்டில் பொறுப்போடு (நம்புங்கையா) இருக்கும் பிள்ளையாதலால், உடனே கிளம்பி, (வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை - அவ்வளவு பொறுப்பு) அவரை கேரியரை அமர்த்தி சொன்ன ரைட் , லெஃப்ட் எல்லாம் எடுத்தேன்... வீட்டில் இருந்து ஒரு 2 கி. மி தள்ளி, ஒரு வீடு முன்னாடி நிறுத்தினார்... தம்பி. இங்க இருங்க... ஆபீஸ் இங்க இருக்குன்னு, உள்ளே போனார்... ஒரு 2 நிமிடம் கழித்து வெளியே வந்து, உங்க செக் மானேஜர் வெச்சிருக்காராம்.. இப்பதான் கிளம்பினாராம், சைக்கிள் குடுங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுரேன்னு, ஜீட் விட்டார்.... நானும் ரொம்ப பொறுமையா 2 மணி நேரம் அவருக்காக அந்த இடத்திலேயே காத்திருந்தேன்... அதுக்கப்புறம் ஆபீஸ்ல கேக்கலாம்னு வீட்டுக்குள்ளே போனா, ஒரு மண்ணும் இல்ல... ஒரு மாமா வந்து, என்னடா வேணும் னு சவுண்டு குடுக்க, அப்பத்தான் உலக ஞானம் வந்து, வெச்சுட்டாண்டா.. அப்படிங்கிறது புரிஞ்சுது...

போலீஸ் ஸ்டேஷன் போனா... ஒரே அட்வைஸ்... ஒரு முட்டாள் கடலில் போட்ட கல்லை, ஆயிரம் அறிவாளிகளால் கூட கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு பஞ்ச் டயலாக்... அந்த எஸ். ஐ. சொன்னது, இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியல... சிட்டில நிறைய பேர் ஏமாத்துவாங்க.. நீங்க தான் உஷாரா இருக்கனும்... * பஞ்ச் *... படிச்சவங்க நீங்க.. இன்ஷூர் கூட பண்ணலியா * பஞ்ச் * இப்படி நிறைய பஞ்ச் டயலாக் கேட்டு, வீடு வந்தோம்...

அப்பா வீட்டுக்கு வந்ததும் எதுவும் திட்டவில்லை.... அக்கா மட்டும் சவுண்டு கொடுத்தார்.. .என் கிட்ட கூட சொல்லாம அப்படி என்ன அவசரம்... இவனுக்கு பொறுப்பே இல்லைன்னு... ஒரு 4 வருஷம் உலகத்தை முன்னாடி பார்த்ததால என்னை ஓவராவே அடக்கி வெச்சிருந்தாங்க... ஒரு நாலு மாதம் சைக்கிள் இல்லாமல்... (அது எவ்வளவு கஷ்டம் ங்கறது அமெரிக்கா வந்து, கார் இல்லாமல் இருந்தால் தான் புரியும்)


கொஞ்ச நாள் கழித்து அப்பா ஒரு பி. எஸ் ஏ வாங்கி கொடுத்தார்... அப்புறம் சில பல பைக்கு மாறி.. இப்ப அந்த சைக்கிள் எங்கே போனதென்றே தெரியவில்லை... இன்னும் அப்பாவோட முதல் சைக்கிள் (150 ரூபாய்க்கு, முதல் மாத சம்பளத்தில் வாங்கியதாம்) பத்திரமாக ஊரில் இருக்கிறது.