Friday, October 31, 2008

ஹாலோவீன்

இன்று ஹாலோவீன்.......

இயந்திர மனிதனாகவும்,
கடல் கொள்ளயனை போலவும்,
பேய்களை போலவும்,
பறவைகள் போலவும்,

பலவகை ஆடை உடுத்தி,
அலுவலகம் முழுவதும் புன்னகை வெள்ளம்....

ரீட் இச்சிக்கி (எனது அலுவலக நண்பர்)
ஒட்டு மீசை ஒட்டி,
பயங்கரமாய் இருக்கிறதா என சிரிக்க.....

இயல்பான என் கட்டை மீசை,
உனக்கென்னடா கெட் அப்பே வேண்டாம்
என நகைக்கிறது...

Sunday, October 26, 2008

டப்பாசா பட்டாசா?

அங்கே தீபாவளி... இங்கே ஞாயிற்றுகிழமை...Laundry, Housekeeping எல்லாம் முடிச்சாச்சு...கொசுவத்தி மேட்டரே கன்ட்ரோல் பண்ணவே முடில..... எவ்வளவு நேரம்தான் நானும் கொசுவத்தி சுத்தமுடியும்.. அதுதான் கிறுக்கி தள்ளிடுவோம்னு ;)

காலை 4 மணிக்கெல்லாம் அப்பா எழுப்பி விடுவார்... முதலில் யார் பட்டாசு கொளுத்துவது என்ற ஒரு குஷி... நமக்கு முன்னாடி யாராவது கட்டாயம் எழுந்து ஒரு லக்ஷ்மி வெடியோ அல்லது ஒரு பாமையோ வெடித்து வெறுப்பேற்றுவான்... நாங்களும் எழுந்தவுடன், நமக்கு தரப்பட்டுள்ள மிளகாய் பட்டாசு இரண்டை, பூஜை அறையில் இருக்கும் ஊதுவத்தியை வைத்து கொளுத்தி நாங்களும் வெடிச்சோம்ல என அறிவிப்போம்.

அடுத்து எண்ணைக்குளியல் ;) வீட்டிலேயே Boiler ஒன்று இருக்கும்...தேங்காய் ஓடு, தென்னை நார், காய்ந்த விறகுகள் எல்லாம் சேர்ந்த ஒரு Fire Tube Boiler (fire inside the tube surrounded by water) அதற்குள்ளே கொஞ்சம் உப்பை போடுவது, தேங்காய் ஓடு எரியும் போது கேட்கும் உஸ் சத்தம் இதிலேயே ஒரு மணி நேரம் ஊறி விடுவோம்... சீயக்காய், புங்கங்கொட்டை எல்லாம் சேர்த்து அரைக்கப்பட்டு (நிஜமா... மீரா ஹெர்பல் எல்லாம் இல்லை) அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து தலையில் தேய் தேய் என தேய்ப்பார்கள்... யப்பா .. இந்த எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வெறுப்பதன் ஒரே காரணம் இந்த ஒரு மேட்டர்தான்... தலைமுடியெல்லாம் வலிக்கும்... விடமாட்டாங்க.. ;) அது முடிந்ததும் ஒரு குட்டி வழிபாடு... சாப்பாடு.. அப்புறம் டைம் ஓடிடும்...

அப்போது வீட்டில் பொட்டி (கம்யூட்டர் இல்லங்க.. டி.வி. கூட) இருந்ததாக நினைவில்லை. தீபாவளி அன்று பேரளவில் சில பட்டாசு வகைகள் கிடைக்கும்... சில சுறுசுறுவத்திகளை சுற்றி சுற்றி பற்றவைத்தும், மிளகாய் பட்டாசை கொளுத்திப்போட்டும் தீபாவளி ஓடிப்போய்விடும்..

அன்றைய மாலையில், புதுப்பானையில் பாகு வெல்லம் காய்ச்சி, அதிரசம், அது மட்டுமல்லாமல், முறுக்கு, பணியாரம், அப்பம் அனைத்திற்கான foundation வேலைகளும் நடக்கும்.

அந்த அதிரசம் தட்டும் வேலை இருக்கிறதே... யப்பா... நினைவிருக்கும் கடந்த ஆண்டுகளில், முதலில் தட்டும் போது கொஞ்சம் சுலபமாக இருக்கும்.. போக போக கட்டியாகிவிடும். விரல் வலிக்கும்... அதில் தண்ணிர் அல்லது எண்ணை சேர்த்தால் பிரிந்துவிடுமாம்.. . முதலில் நான்கைந்து பேர்கள் சேர்ந்து தட்ட துவங்குவார்கள்... கடைசியில் பார்த்தால், பெரும்பாலும் 2 அல்லது 3 பேர் இருந்தால் அதிகம்.. .

இரண்டு அண்டா (அதாவது பெரிய பாத்திரம்) சில பல தூக்குகளை (அது மீடியம் சைஸ் பாத்திரம் ... தொங்க ஏதுவாக ஒரு பெரிய Handle இருக்கும்) அனைத்தையும் இந்த பலகாரங்களை கொண்டு நிறைத்த பின்னர் ஒரு 10 அல்லது 11 மணி அளவில் தூக்கம்....

பூவிருந்தவல்லி (அதாங்க பூந்தமல்லி) தாத்தா வீட்டில் இருந்த வரை... தீபாவளி விட நோன்பு பண்டிகைதான் சிறப்பு... ஒரு காலத்தில் பண்டிகையின் போது ஒன்றாக சேரும் குடும்பத்தினர் எண்ணிக்கை ... நூறு பேர் வரை போனதாக நினைவுண்டு..... காலை ஒவ்வொருவரா வரத்தொடங்க... சமையல் கட்டில் அம்மா தலைமையில், வடை குழம்பு, மோர் குழம்பு, உருளைகிழங்கு பொரியல் உட்பட்ட பல சாப்பாட்டு ஐட்டங்கள் அமைதியாக தயாராகும்

அத்தனை பேருக்கும் சிற்றுண்டி முடிந்தவுடன், சேர்ந்து வழிபாடு நடக்கும். எப்போதும் போல அப்பாவும், பெரியத்தையும், புதுபுது பதிகமாக பாடி வழிபாட்டை பெரிதாக்க, சிறியவர்கள் எல்லாம் எப்போது வழிபாடு முடியும் என மானசீகமாக வேண்டி வழிபாடு முடியும்போது கடவுள் கருணை காட்டிய பெருமையை எண்ணி, பூரிப்போம்.

அது முடிந்தவுடன் சாப்பாட்டு பந்தி, பந்திக்காகவே ஓலைப்பாய்கள் சில இருக்கும். அது போதாதென்று, Bed Spread சிலவற்றை மடித்து, விருந்தினர் அமர, சாப்பாட்டு விழா தொடங்கும். ஸ்பெஷல் ஐடங்களான குழம்பு வடை, தயிர் வடை, அப்பம் பரிமாறுவது குஜால்ஸ்...

உறவினர்களுக்கு கொடுத்தனுப்ப ஏற்கனவே வாழையிலையிலும் பத்திரிக்கை தாளிலும் பார்சல் செய்யப்பட்டு இருக்கும், அது இல்லாமல், வீட்டிற்கென சில பெரிய பாத்திரங்களில் இன்வென்டரி கன்ட்ரோல் செய்யப்பட்டு இருக்கும்.

எங்கள் சிறிய அத்தை குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஒரு 1000 சர வெடியை கொண்டு வருவார்கள்... அதோடு சேர்த்து நாமும் நம்முடைய மிளகாய் வெடியின் திரியை கிள்ளி 5 அல்லது 6 வெடிகளை ஒன்றாக சேர்த்து மினி சர வெடியெல்லாம் வெடிப்போம்... நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என எப்போதும் ஆசையாக இருக்கும்... அப்பாவிடம் கேட்டால், காசை கரியாக்காதீங்க.. என்ற பதில் பல ஆண்டு தீபாவளியும் கேட்டிருக்கும்... பள்ளி நாட்கள் முடியும் போதே பட்டாசு மேலிருந்த ஆர்வமும் குறைந்து விட்டது... ஆனால், சென்னை வந்த பிறகு, தீபாவளி அன்று இரவு, மொட்டை மாடியின் மேலே, அல்லது தண்ணீர் தொட்டியின் மேலே படுத்துக்கொண்டு வான வேடிக்கைகளை வேடிக்கை பார்ப்பது, ஒரு அழகான அனுபவம்..

டாலஸில் இருக்கும் போது, அமெரிக்க சுதந்திர நாளின் போது வான வேடிக்கை (அதாவது நிஜமான வானவேடிக்கை) முதல் முறையாக நேரில் பார்த்தேன்... சும்மா கலக்கல்... 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து வானத்தில் வண்ணக்கோலங்கள்... அதுவாவது பராவாயில்லை... இப்போ ஹவாயில். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும், 10 அல்லது 15 நிமிடங்கள் வானவேடிக்கை.. என்னுடைய அபார்ட்மென்ட் லனாய் (balcony in hawaiian) இல் இருந்தே அழகாக தெரியும்... முதலில் 2 வாரங்கள் வேடிக்கை பார்த்தேன்... இப்போது வெடி சத்தம் கேட்டாலும் .. .அட போடா.. என அசையாமல் இருக்கிறேன்...

ஆனால், மனதிற்கு, 10 ரூபாய் கிடைத்தவுடன் பக்கத்து கடைக்கு சென்று ஏதாவது ஒரு பட்டாசை வாங்கி, எங்கள் வீட்டின் எதிரே அதிக பட்டாசு குப்பை இருக்கிறது என நிரூபித்த காலமே சுகமாக இருக்கிறது...


உறவுகள் கூடவும், உள்ளம் களிக்கவும், உள்ளது சிறக்கவும், உவகை பெறுகவும்... அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Tuesday, October 21, 2008

ஈழம் குறித்து....

கவிதை போட்டி.... இளநிலை கல்வி மூன்றாம் ஆண்டில் நானும் பெயர் கொடுத்தேன்... ஈழத்தமிழகம்; சுதந்திர இந்தியா இந்த இரண்டு தலைப்புகளையும் தந்திருந்தார்கள்... கிறுக்கல்கள் தொடர்ந்தது..

இரண்டு முழு பக்கங்களுக்கு கிறுக்கி தள்ளினேன்..... நினைவில் இருந்தது இதுதான்.....

இந்தியாவின் காஷ்மீரை தனியே கேட்டால்,
இன்முகத்தோடு நாம் எடுத்து தருவோமா?
இலங்கையும் குடியாட்சி நாடே
இதில் தமிழர்க்கும் பிறருக்கும் ஏன் வேறுபாடே

ஒரு நாட்டு சோதரராய் வாழ்ந்தால்,
பிற வேற்றுமை யாவும் தீயில் எறிந்தால்,
திரு செய்யும் தமிழர்கள் தெருவில் வீழமாட்டார்
அந்நியராய் பிற நாட்டில் அவதியுற மாட்டார்.

கரு..... தமிழர்கள் அமைதி உடன்பாடு மேற்கொண்டு, ஆயுத போரை கைவிட்டு, சமரசமாக வாழ வேண்டும் என்பதே..... மற்ற வரிகள் நினைவில் இல்லை.....

கவிதை போட்டியன்று, உரத்த குரலில், ஒழுங்கான உச்சரிப்பில், கவி படித்து முடித்தேன்.... என்னுடைய வகுப்பறை மாணவர்கள் உரத்த கையோசை எழுப்பினர்.... நல்லா இருந்ததா? ... ஒன்னும் புரியல, ஆனா தமிழ்ல அழகா படிச்ச என்று புகழாரம் சூட்டினான் என் நண்பன்....

என்னுடைய சீனியர்.... சுதந்திர இந்தியா என்ற தலைப்பில் ஒரு கவி எழுதினார்....

இங்கு மட்டுமே கோட்டைக்கு கோடம்பாக்கம்
குறுக்கு வழியாகிறது...
இங்கு இளைஞர்களின் ஏக்கம்,
சிம்ரனின் இடுப்பளவிலேயே இருக்கிறது...

இன்னும் நிறைய... நினைவில் நின்றது சிம்ரனின் இடைதான் ;) அவரது ஏக்கம் சினிமாவிற்கு அளவுக்கதிமாக தரப்படும் ஊடக மதிப்பீடுகளும், அதனால் ஏற்படும் கவனச்சிதறல்களும்......

அன்று அவர் முதல் பரிசையும், நான் இரண்டாம் பரிசையும் பெற்றோம்.... போட்டிகள் முடிந்து, வெளியே வரும் போது, ஒரு நண்பர் வந்தார்... நடராசன், கவிதை எல்லாம் நல்லா பாடினீங்க.... அங்க நடக்கிற உண்மை நிலை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்.... . இல்லைங்க.. செய்திகளின் வாயிலாக தெரிந்தது மட்டுமே என பதில் உரைத்தேன்.... (இந்து நாளிதழ் மட்டுமே என்னுடைய வெளி உலக ஞானம்).. …. தன்னுடைய அத்தை மகனை, கைக்குழந்தையை ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் கொதிக்கும் தார் உருளையில் முழுகடித்து கொன்றதாக அவர் என்னிடம் கூறினார்.... இத்தனை கொடுமையா? என்னால் எதுவும் பேச முடியவில்லை.... I am Sorry என்ற வார்த்தையை உரைத்து, அமைதியில் நேரத்தில் கரைத்தேன்....

பல வருடங்கள் கழித்து, இலங்கை இன பிரச்சினையே விக்கிப்பீடியா, ப்ளாகுகள், மற்றும் இணையத்தின் வழியாகவே உணர்ந்து இருக்கிறேன்....

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் “விடை கொடு எங்கள் நாடே” என்னும் பாடலை கேட்கும் போது, கண்ணீர் கன்னத்தில் முத்தம் கொடுக்கும்... எத்தனை வலி....

சிறுபிள்ளைதனமாக முன்பெல்லாம் நிறைய கேள்விகள் எழும்... தமிழர்கள் அரசாட்சியில் போட்டியிட்டு பங்கேற்கலாமே! அவர்கள் இந்தியாவில் தமிழகம் இயங்குவதை போன்று ஒரு ஆட்சியை நிறுவலாமே! எதற்காக ஆயுத தாக்குதலை மேற்கொள்கிறார்கள்.. என்றெல்லாம்...
அடக்குமுறை என்பதும், அதிகார வன்முறை என்பதும், அரசியல் சூது என்பதும் அதிகப்படியாக நடக்கும் நிலையில் வேறு வழியேதும் இல்லாமலே அவர்கள் ஆயுத போரை எடுத்துக்கொண்டார்கள் என்பது ஊடகமாக புரிந்தது....

வவுனியா, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு போன்ற இடங்களில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக விண்ணப்பிக்க, தமிழில் இருக்கும் பிறப்பு சான்றிதழ்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழி பெயர்ப்பின் போதே மனம் நெகிழும்..... பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு, மற்றொரு இடத்திற்கு குடி பெயர்வது எவ்வளவு பாரமான ஒரு செயல் என்பதை நான் பல முறை உணர்ந்ததுண்டு..... இந்த நண்பர்களுக்கோ வாழ நினைத்தாலும் வேறிடம் செல்ல வேண்டிய கட்டாயம்.... செல்லும் இடத்தில் அகதி என்ற நிலை... இந்தியவோ, நெதர்லாந்தோ ... அவர்கள் வாழ்க்கை தரம் பூர்வீக நாட்டில் இருப்பது போல் இருக்காது என்பது உறுதி....

எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் தானே? ஒவ்வொரு சமவெளியும் ஒரு காலத்தில் கொழுந்து விட்டெரியும் எரிமலையாகத்தானே இருந்தது....


தமிழர்கள் என்ற நிலை மட்டுமல்ல. மனித நேயம் என்ற நிலைப்பாட்டிலேயே, எங்கும் யாரும் வாழும் உரிமை வேண்டும். ஆனால், நம் நாட்டிலேயே மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவிலும், ஒரிசாவிலும், நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது, இலங்கை மட்டுமல்ல, இந்தியாவிலும், மனிதத்துவத்தை மதிக்கும் குணம் முழுமையாக இருப்பதாக தெரியவில்லை. .

நம்மால் முடிந்தது..வாய்ப்பு கிடைத்தால், உரியவருக்கு உதவிடலாம்... . பிள்ளைகளுக்கும், சிறுவர்களுக்கும் பேச்சுவாக்கில் வேறுபாடு இல்லாமல் பழகுவதை குறித்த சிந்தனைகளை விளைவிக்கலாம்.... பிற கலாச்சாரங்களின் சிறப்பையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் விளைவிக்கலாம்... அமைதி திரும்பும், மனித நேயம் மலரும் என்றும் காத்திருப்போம்... இலங்கையில் மட்டுமல்ல... இந்தியாவிலும்... உலகெங்கிலும்... காலம் கனியட்டும்.. விரைவில்.

Tuesday, October 7, 2008

உயிர் வளர்க்கும் கனவுகள்

இரவும் அல்லாத பகலும் அல்லாத,
உறக்கம் முடியாத, விழிப்பு துவங்காத
இன்றைய அதிகாலை, இனிமையாய் துவங்கியது
உன்முகம் நினைவினில்,
கனவு நிலையா? விழிப்பு நிலையா
என பிரித்தரிய முடியாத நிலையினில்,
ஒன்று மட்டும் புரிந்தது
உயிருக்கு உவகை பாய்ச்சும் உரம்
உணர்வுக்கு மட்டுமே உள்ளது....
அந்த உணர்வு,
உன் நினைவினில் மட்டுமே உயிர்க்கிறது..

Wednesday, October 1, 2008

பயன் மறந்த பயிர்கள்!

ஏழெட்டு வகுப்பு வரை,
எப்போதும் மாறாமல்,
இரண்டு மலை,
ஒரு சூரியன்,
ஒரு படகோட்டி,
ஒரு தென்னை மரம்,
ஒரு குடிசை வீடு,
நான்கு பறவைகள்...
எத்தனை முறை வரைந்தாலும்,
நல்லாத்தான் இருக்கு என்று விதைத்த
நம்பிக்கை விதைகள்....

கோபமும் அறியாமையும்
கொள்கையாய் ஊறாமல்,
மிகுதிக்கண் இடித்து,
களை பறித்த கண்டிப்பு,

ஒழுக்கம் என்ற பெயரில்,
ஒழுங்கான நலம் வாழ
அடக்குமுறை பாணியில்,
ஆட்கொண்ட வேலிகள்....

ஈதல் அறம்,
திறன்றிந்து தீதின்றி ஈட்டல் பொருள்,
என பேச்சு வழக்கிலேயே
நல்லுணர்வு நண்ணீர்

பயிர் வளர்ந்தது,
பயன் முழுதும்.... பயிருக்கே!

இன்று ஆணி ஏதுமில்லை

எனக்கு பிடித்தது....................
இயற்கை, கவிதை,
இயல்பின் புன்னகை,
மற்றும் உனக்கு பிடித்த அத்தனையும்வான்வெளி விஞ்ஞானிகள்
வருத்தத்திற்குறியவர்கள்..
வெண்ணிலவு விண்ணில் இருக்குமென
கலன் ஏறி பயணிக்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்..
கண்ணில் நிலவேற்றிய பெண்களைகவிதை எழுதிய
சட்டை வாங்கத்தான் கடை சென்றேன்..
உன் பெயர் தெரியாததால்
சரியான கவிதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை..நீ அழகா இருக்கேன்னு நினைக்கல
அது உண்மைதானே...
அதை விட சிறப்பான வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன்...நான் உன்னை பார்த்திருக்கும் போதே,
எனக்கு கோபமும் வருகிறது...
இமை மூடும் சிறு கணங்கள் ..
எனக்கு பிடிக்கவில்லை...