Monday, January 26, 2009

சிதறல்

இதோ தொடு வானில்

வெளிச்சப்பெட்டிக்குள்  கரையான் ஓட்டை போல்

மொத்த வெளிச்சத்தையும்  கீற்றாக்கி மின்னியது..

கரிய கடல் பரப்பில்  வெள்ளி பாதை போட்டது...

 

உற்று பார்க்கிறேன், மேலும் பல நட்சத்திரங்கள்,

மேலும் பார்த்தால், மேலும் பல நூறு,

உரைக்க முடியாத வியப்பு,

நட்சத்திரங்களின்  மக்கள் தொகை 

நேற்று முதல் பெருகியதோ..!

 

வாழ்வாங்கு வாழ்ந்தவர் 

உலகை நீத்த பின்னர்

வின்மீனாகி வின்னகரம் அடைவாராம்,

இங்கும் விதி விலக்கு இருக்குமோ!


செல்வாக்கு இருந்தால், 

வின்மீன் பட்டாவும்

விலைக்கு கிடைக்குமோ!

இருக்கும்... இல்லை என்றால் 

இத்தனை வின்மீன்கள் எங்கிருந்து முளைத்திருக்கும்.

 

இப்படி எல்லாம் சிதறி விழும் எண்ணங்கள்

சிதறி விழும் எண்ணங்களில்,

வலுவாய் ஒரு எண்ணம்...

 

பிரபஞ்சத்தில் ஆயிரம் கோள்களாம்,

பிரபஞ்சத்தை தாண்டி  பல்லாயிரம் பிரபஞ்சகளாம்...

 

இந்த நட்சத்திரம்  இத்தனை ஒளி ஆண்டுகள்

தாண்டி இந்நிலையில்  இருக்கிறதாம்.

அந்த நட்சத்திரங்களுக்கும்  வாழ்வு உண்டாம்...

இன்னும் சில ஆயிரம்  ஒளி ஆண்டுகளின் பின்னால் மாண்டு போகுமாம்!

 

ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒளி வீச காரணமாம்..

அவற்றின் வடிவம் பெரிதானால் வாழ்க்கை சிரிதாகும்,

விக்கிபீடியாவும்,  அரை வேக்காடு புத்தக அறிவும்,

வேண்டாமல் வந்ததும்  வியப்பெல்லாம் சிதறியது...

 

இன்றும் இருண்ட வானில்

நட்சத்திரங்களை பார்க்கிறேன்...

இருபது வருடத்திற்கு  முன்னால்

இனம் புரியா மகிழ்ச்சி  இன்றில்லை...

 

எல்லா புரிதல்களும்

பலன் அளிப்பதில்லை...

இதோ அடுத்து விக்கிபீடியாவில்,

அலை எழுவது எப்படி  என படிக்க விழைகிறேன்... 

Friday, January 16, 2009

விழித்திருத்தலின் வலி..

முன் நிகழ்ந்த நினைவுகளால்

நிறைவாய் ஒரு கனவு,

நித்தம் ஒரு நிலவு வேண்டுமென

சித்தம் விழைந்தது

 

மொத்தமும் அழகாய்,

விளிம்பில்லா வியப்பாய்

முத்து நகை சிரிப்பாய்,

நித்தமும் முழு நிலவாய்

 

வட்ட வடிவத்தில்,

வானில் ஒளி பாய்ச்சி

முட்டி வரும் மேகங்களில்,

முகம் மறைத்து உணர்வளித்தும்

 

மௌனத்திலேயே பேசுகிறேன்..

மொழியின் குறையெல்லாம்

உன்னாலும், அவளாலும்,

அடிக்கடி புரிந்திடும்.

 

துயில் கலைந்து, கண் விழித்து,

சாளரத்தின் வழியே

தலை சாய்த்து பார்க்கின்றேன்,

கனவில் மகிழ்வித்த  கவின் நிலவு அங்கில்லை

 

விழித்திருத்தலின் வலி..

விழிகளை வலிந்து மூடி

கரிய இருள் வரவழைத்து,

கனவினை தேடி பிழைக்கிறேன்...

Monday, January 12, 2009

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

வீட்டிலே துக்கம் நடந்தால்

விழா எடுக்கக்கூடாதென

விதிமுறை இருப்பதாலே

அடுத்த மாதம் வரை இருந்திருக்கலாம்

அன்பு கலந்த வார்த்தைகள்...

 

எந்த ஆண்டு நன்றாய் இருந்தது

எங்கேனும் யாரானும் மரித்துக்கொண்டே இருப்பார்கள்

பண்டிகையின் அன்று கூட பக்கத்து தெருவிலே

பட்டாசு இல்லை என பல குழந்தை அழுவார்கள்...

 

இலங்கை என்றில்லை...

அறிமுகம் இல்லா ஆப்ரிக்க நாடுகளில்,

ஆண்டுகள் தோறும், அடுத்தடுத்த காரணிகள்

ஆயிரமாயிரம் ஆட்கள் மரணம்,

ஆப்ரிக்காவில் இருப்பவன் தொப்புள் கொடி உறவில்லையா?

அவரெல்லாம் மனிதர் இல்லையா?

 

இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன

ஊக்கமளிக்க, உறவு நிலைக்க,

உணர்வு பகிர்ந்து, உரமளிக்க

இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன,

 

வெறும் களிப்பும் கூத்தாட்டமும் என்றால்,

விழாக்கள் தேவையில்லை,

விலை விடுதிகள் போதும்,

 

வருத்தம் தவிர்க்க மருந்தொன்று உண்டா,

வருத்தம் தவிர்க்கும் செயல்தான் மருந்து!

இயன்றன செய்வோம்...

 

அவதியில் தெருவிலே வாழும்

தொப்புள் கொடி உறவிற்கு,

அரை வயிறு உணவாயினும்,

அன்புடன் தருவோம்...

 

அன்பு பொங்கிட, புன்னகை பரவிட

பொங்கல் கொண்டாடுவோம்...

வளம் சிறக்க வாழ்த்துக்கள்...