Wednesday, January 18, 2012
காதலினால் மானுடர்க்கு கவிதை தோன்றும்
உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
நான் என்றும் சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்
இப்படி ஒரு காதல் என்றால்
எப்படி என யாரறிவார்
இதயம் வலிக்கும் இன்பம்
மெதுவாக சொன்னது பார்
அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை
அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை
உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்
இருள் மாய்ந்து ஒளி வரும்போதும்
ஒளி தேய்ந்து இருள் வந்தாலும்,
ஒன்றேதான் என் ஆசை
என்னருகே நீதான் வேண்டும்
என் காதல் அது என்று கைகூடுமோ?
என் காதல் அது என்று கைகூடுமோ?
என் கனவினில் இனி வண்ணம் பல மாறும்
நான் உண்மை சொன்னேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன்மேல் ஆணை செய்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்
என் கனவிலும்
என் மூச்சிலும்
என் உயிரிலும்
உன் நினைவே நினைவே
அதி காலையும்
மதி இரவிலும்
விழி முழுவதும்
உன் முகமே முகமே
உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்
உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்
Saturday, May 8, 2010
பிரிவு கொடியது...
அப்பா... நான் பவர் பஞ்ச் அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க... என்ற படி “கிங் கமஹமேஹா பஞ்ச்” என உரத்த குரலில் வயிற்றில் ஓங்கி அடித்தான்.... (இது dragon balls பார்க்கிறவர்களுக்கு புரியும் ;-) ) நான் வயிற்றை கொஞ்சம் இறுக்குவதற்கு முன்னால் அடித்ததால் சரி வலி.... டிஸ்னி எக்ஸ். டி... கார்ட்டூன் நெட்வோர்க் எல்லாம் சேர்ந்து ஆதித்தியனை கொஞ்சம் வன்முறை பிரியனாக மாற்றியுள்ளது.
தினமும் தூங்கும் போது, அவன் கைகளின் நான் படுத்துக்கொள்ள வேண்டும்.... நான் படுக்கையறை வரும்போதே, யெஸ... கழுத்து வந்தாச்சு, இனிமே தூங்கலாம் என்று கூதூகலிப்பான்.... என் கழுத்தை சுற்றி அவன் கைகளை இறுக்கித்தான் தூங்குவான்.... போதுமான கதகதப்பு இல்லையென்றால், முட்டியால் மோதி, பலவாறும் அட்ஜஸ்ட் செய்து என்னை பொம்மை போல் மாற்றுவான்.... பல நாட்கள் சலிப்படைவேன்... ஆதி... ரொம்ப டயர்டா இருக்கு.. ப்ளீஸ் வேண்டாம் என்று கொஞ்சினாலும் விடமாட்டான்...
ரிப்பீட்டேய் கேம் வேறு.... எதை சொன்னாலும் அப்படியே திரும்ப திரும்ப சொல்லுவான்... கடைசியில் வான் சிறப்பு தான் என்னை காப்பாற்றும்... துப்பார்க்கு துப்பாய... குறள் சொல்லி நான் ஜெயிப்பேன்...அவனும் தூப்பாக்கு... என துவங்கி அதே நடையில் வார்த்தைகளை மாற்றி Cheating Cheating என்று சண்டைக்கு வருவான்...
டி.வி பார்க்க விடமாட்டான்... அவன் சாப்பிடும் போது அவன் ப்ரோக்ராம் தான் பார்க்க வேண்டுமாம்.... நான் ரிமோட் கன்ட்ரோல் எடுத்தால் அவன் முகம் சோகமாகி விடும்.... ஒரு கொட்டு வைத்துவிட்டு ரிமோட்டை அவனிடமே கொடுத்து விடுவேன்....
வெளியே சென்றால் இன்னும் தூக்கி செல்ல வேண்டும் என்று அவ்வப்போது அடம் பிடிப்பான்.... வளந்துட்டடா... இனிமே உன்னை தூக்க முடியாது என்று சொன்னாலும், அவனை தலை மேல் தூக்கி உட்கார வைத்து செல்வதில் எனக்ககும் ஒரு மகிழ்ச்சிதான்... முதுகு வலி இருந்தாலும், அவனை தூக்கி கொண்டு சண்டை போடுவேன்...
.கோடை விடுமுறையில் அவன் நண்பர் பலரும் ஊருக்கு சென்றதாக பல நாள் பேசியுள்ளான்... என்னால் முடிந்த்து... விடுமுறை நாளில் மட்டும்,சுற்றமும் நட்பும், சுற்றி காணலும் காட்டினேன்... சென்ற வாரம் உறவினர் சிலர் பெங்களூரு செல்வதாக கூறியிருந்தனர்... ஆதி வயதின் இரு சிறுவரும் அங்கு செல்வதாக இருந்தது... 4 நாட்களாக ஆதித்தியன் தானும் பெங்களூரு செல்வதாகவும், தான் வளர்ந்து விட்டதாகவும், பாட்டியிடம் பத்திரமாக இருப்பேன் என பலவும் கூறி எங்களிடம் அனுமதி பெற்றுவிட்டான்... நேற்று இரவு அவனை காவேரி எக்ஸ்பெரஸ் இரயில் ஏற்றி வழியனுப்பினோம்...
திரும்ப வரும் போது, ஹாட் சிப்ஸில் மசாலா பால் குடிக்க நானும், துணைவியாரும் அமர்ந்தோம்...இருவருக்கும் கண் கலங்கியிருந்தது.... அதிகம் பேச முடியவில்லை... என்றோ ஒரு நாள், கல்வி என்றோ, வேலை என்றோ என்னை விட்டு பிரிவானோ என்று ஏதோ ஒரு எண்ணம்..... மன அழுத்தம்...
Thursday, February 12, 2009
Monday, January 26, 2009
சிதறல்
இதோ தொடு வானில்
வெளிச்சப்பெட்டிக்குள் கரையான் ஓட்டை போல்
மொத்த வெளிச்சத்தையும் கீற்றாக்கி மின்னியது..
கரிய கடல் பரப்பில் வெள்ளி பாதை போட்டது...
உற்று பார்க்கிறேன், மேலும் பல நட்சத்திரங்கள்,
மேலும் பார்த்தால், மேலும் பல நூறு,
உரைக்க முடியாத வியப்பு,
நட்சத்திரங்களின் மக்கள் தொகை
நேற்று முதல் பெருகியதோ..!
வாழ்வாங்கு வாழ்ந்தவர்
உலகை நீத்த பின்னர்
வின்மீனாகி வின்னகரம் அடைவாராம்,
இங்கும் விதி விலக்கு இருக்குமோ!
செல்வாக்கு இருந்தால்,
வின்மீன் பட்டாவும்
விலைக்கு கிடைக்குமோ!
இருக்கும்... இல்லை என்றால்
இத்தனை வின்மீன்கள் எங்கிருந்து முளைத்திருக்கும்.
இப்படி எல்லாம் சிதறி விழும் எண்ணங்கள்
சிதறி விழும் எண்ணங்களில்,
வலுவாய் ஒரு எண்ணம்...
பிரபஞ்சத்தில் ஆயிரம் கோள்களாம்,
பிரபஞ்சத்தை தாண்டி பல்லாயிரம் பிரபஞ்சகளாம்...
இந்த நட்சத்திரம் இத்தனை ஒளி ஆண்டுகள்
தாண்டி இந்நிலையில் இருக்கிறதாம்.
அந்த நட்சத்திரங்களுக்கும் வாழ்வு உண்டாம்...
இன்னும் சில ஆயிரம் ஒளி ஆண்டுகளின் பின்னால் மாண்டு போகுமாம்!
ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒளி வீச காரணமாம்..
அவற்றின் வடிவம் பெரிதானால் வாழ்க்கை சிரிதாகும்,
விக்கிபீடியாவும், அரை வேக்காடு புத்தக அறிவும்,
வேண்டாமல் வந்ததும் வியப்பெல்லாம் சிதறியது...
இன்றும் இருண்ட வானில்
நட்சத்திரங்களை பார்க்கிறேன்...
இருபது வருடத்திற்கு முன்னால்
இனம் புரியா மகிழ்ச்சி இன்றில்லை...
எல்லா புரிதல்களும்
பலன் அளிப்பதில்லை...
இதோ அடுத்து விக்கிபீடியாவில்,
அலை எழுவது எப்படி என படிக்க
Friday, January 16, 2009
விழித்திருத்தலின் வலி..
முன் நிகழ்ந்த நினைவுகளால்
நிறைவாய் ஒரு கனவு,
நித்தம் ஒரு நிலவு வேண்டுமென
சித்தம் விழைந்தது
மொத்தமும் அழகாய்,
விளிம்பில்லா வியப்பாய்
முத்து நகை சிரிப்பாய்,
நித்தமும் முழு நிலவாய்
வட்ட வடிவத்தில்,
வானில் ஒளி பாய்ச்சி
முட்டி வரும் மேகங்களில்,
முகம் மறைத்து உணர்வளித்தும்
மௌனத்திலேயே பேசுகிறேன்..
மொழியின் குறையெல்லாம்
உன்னாலும், அவளாலும்,
அடிக்கடி புரிந்திடும்.
துயில் கலைந்து, கண் விழித்து,
சாளரத்தின் வழியே
தலை சாய்த்து பார்க்கின்றேன்,
கனவில் மகிழ்வித்த கவின் நிலவு அங்கில்லை
விழித்திருத்தலின் வலி..
விழிகளை வலிந்து மூடி
கரிய இருள் வரவழைத்து,
Monday, January 12, 2009
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
வீட்டிலே துக்கம் நடந்தால்
விழா எடுக்கக்கூடாதென
விதிமுறை இருப்பதாலே
அடுத்த மாதம் வரை இருந்திருக்கலாம்
அன்பு கலந்த வார்த்தைகள்...
எந்த ஆண்டு நன்றாய் இருந்தது
எங்கேனும் யாரானும் மரித்துக்கொண்டே இருப்பார்கள்
பண்டிகையின் அன்று கூட பக்கத்து தெருவிலே
பட்டாசு இல்லை என பல குழந்தை அழுவார்கள்...
இலங்கை என்றில்லை...
அறிமுகம் இல்லா ஆப்ரிக்க நாடுகளில்,
ஆண்டுகள் தோறும், அடுத்தடுத்த காரணிகள்
ஆயிரமாயிரம் ஆட்கள் மரணம்,
ஆப்ரிக்காவில் இருப்பவன் தொப்புள் கொடி உறவில்லையா?
அவரெல்லாம் மனிதர் இல்லையா?
இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன
ஊக்கமளிக்க, உறவு நிலைக்க,
உணர்வு பகிர்ந்து, உரமளிக்க
இங்கு விழாக்கள் எடுக்க காரணங்கள் இருந்தன,
வெறும் களிப்பும் கூத்தாட்டமும் என்றால்,
விழாக்கள் தேவையில்லை,
விலை விடுதிகள் போதும்,
வருத்தம் தவிர்க்க மருந்தொன்று உண்டா,
வருத்தம் தவிர்க்கும் செயல்தான் மருந்து!
இயன்றன செய்வோம்...
அவதியில் தெருவிலே வாழும்
தொப்புள் கொடி உறவிற்கு,
அரை வயிறு உணவாயினும்,
அன்புடன் தருவோம்...
அன்பு பொங்கிட, புன்னகை பரவிட
பொங்கல் கொண்டாடுவோம்...
வளம் சிறக்க வாழ்த்துக்கள்...
