Sunday, June 21, 2020

தந்தையர் தின வணக்கங்கள்


கொஞ்சிடாத தந்தையே
கோபக்கார தந்தையே
கொள்கை கொள்கை என்றே பேசி
கொடுமை செய்த தந்தையே

குழந்தை என்றும் எண்ணாமல்
குடும்பம் விட்டு என்னையும்
படிக்க வெளியே அனுப்பியே
தவிக்க விட்ட தந்தையே

காலை எழுந்து கல்லையே
கடவுளாக கருதியே
கனிவு கொண்டு தொழுதிட
கடுமை காட்டிய தந்தையே

சிறுவன் ஒருவன் என்றாலும்,
சிவன் எனவும் மொழி எனவும்,
சொற்பொழிவெலாம் அழைத்து சென்று
சோற்வு தந்த தந்தையே

பிற்பல வருடம் எல்லாம், உமை
பற்பல குறையே கூறி, நான்
கற்பித்த குறையை கூட
சிரித்துடைத்த தந்தையே

இத்தருணம் எண்ணி நான்
எனக்குள்ளே சிரித்திருந்தேன்

கற்றமைந்த அறிவுக்கெல்லாம்
காரணம்நீரேயானீர்,
சொற்றொடரின் தமிழன்னை
வித்தெல்லாம் நீரேயானிர்,

கற்றவை கடுந்து எனது,
கனவும்,  கைகொண்டதும்,
கண்டதை தாண்டி நான்,
உற்றதும் உந்தையாலே.

சிந்தனை உள்ளூன்ற
சீற்றமும், நீரேயானிர்,
சீற்றம் அடங்கிய தோற்ற
சிரிப்பும் உம்மால் தந்தீர்.

சிவமும், தவமும், தமிழும், இனமும்
சிந்தை சிளிர்க்க கனவும், கவியும்,
உலகம் முழுதும் உரிமை என்னும்,
உணர்வு என்னில் நீரே நிரைந்தீர்.

அறிவில் சிறந்த ஆண்மகன் யாரும்,
உலகின் சிறந்து உவந்து இருப்பார்.
எல்லாரும் போலே உண்டுறுங்கி உயிர்பெருகி
அல்லார், அவர் நிலை தனிநிலை, எம்மில் உம்மை போல்.

உள்ளது சிறத்தலும், உயர உயரவும்,
சிந்தை சிறக்க, சிவமே தவமாயும்,
விந்தை உலகின் வியப்பின் இயற்கையை
நன்றே நயந்த தந்தையே வாழி வாழி.