Wednesday, April 10, 2019

உலகின் அழகின் அருள் அன்றி ஏதுமில்லை


மன நிலை பிழற்ந்த மக்களை பார்த்து நான்

மனம் கவையுற்ற காலமுண்டு,

அவர் உடையும், உவகையும், உளறல் மொழியும்,

அச்சமும், வெறுப்பும், தந்ததுண்டு.

அவர் அருகே சென்று பார்த்தபின்,

என் சுவடு நிறைய அவரிடம் கண்டபின்,

மன நிலை சிதைவினை மதி அறிந்த பின்

அச்சம் போனது, அன்பே நின்றது.



மானுடம் அல்ல, மண்ணின் உயிர்க்கும்,

தகுதி வரைந்து, தரவரிசை தந்தோம்,



ஆவினம் சிறந்தது, எருமையோ இழிந்தது,

பருந்தது உயர்ந்தது, பன்றியோ இழிந்தது,

சைவம் சிறந்தது, ஊன் உண்ணும் உயிரெல்லாம் இழிந்தது.



நாய் நன்றியுடைத்து, பூனையோ அமங்கலமுடைத்து,

சேவல் சிறந்தது, ஆந்தையோ அவலமானது,



எவ்வுயிறும் இறை எனில் ஏற்ற தாழ்வுண்டோ..

சிந்தை தெளிவின் பின், எவ்வுயிறும், ஏற்புடைத்தே



கண் பீளையும், உடல் கழிவுகளும்,

முகம் சுளிக்கும், மூச்சடைக்கும்,

என் உயிர் மழலை எச்சமாயினும்,

என்றும் அது அறுவெறுப்பில்லை... அது அன்பு நிலை..



உறுத்தும் உமிழ்நீர் கூட பாலொடு தேனாகும்,

உயிரை தீண்டும் இன்ப காதலின் கூடும் காலும்,

உவர்க்கும் உடல் வியர்வை வாசம் கூடிடும்,

உயிர் தளிர்க்கும் தீண்டுதல் சேரும் காலும்.



எதையும் வெறுக்க இங்கு காரணம் இல்லை,

இயல்பின் வாழ்வில், இன்பமின்றி வேறில்லை,



சிதையும், சேரும், பின்னை மாறும் மயங்கும்,

இங்கு நிலைத்த நிலை ஏதுமில்லை,



நெருநல் உளன் ஏதும், நாளையில்லை,

நிறையறிவு நாம் நோக்கி, நெஞ்சில்,

நேசம் மிக நிறைவே கொண்டால்,

உலகின் அழகின் அருள் அன்றி ஏதுமில்லை..

No comments: