Tuesday, November 20, 2018

ஆண்கள் தினம்...


ஆண்கள் தினம் இன்றென இணையத்தில் கண்டேன்
ஏன் இது எனவே நானும் எண்ணியிருந்தேன்..
எத்தனை வியப்பு,  எதிர்பார்க்கவே இல்லை நான்...

33% விழுக்காடு எமக்கு தர, நீ யார்? உம் இனத்தை கண்டால்
வாழ்த்த கூட வாய் வரவில்லை என்றார் ஒருவர்.
பெண்தினம் கொண்டாட காரணம் இருந்து, சரித்திரம் இருந்து,
பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து அது சர்வதேச நிகழ்வு
உனக்கென்ன காரணம்? என்றார் ஒருவர்,

பல பதிவுகளும், கேட்ட பதில்களும், பார்த்த விழிகளும்,
பொது புத்தியை மட்டுமே பறை சாற்றியது...
பாவம் பெண்கள்... ஆண்களுக்கென்ன?

எம் தோழர்களுக்கு 498A என்றாளோ,
காதல் முறிந்த பெண்ணோ, பெற்றோரோ.. வாரி பூசிய வன்புனர்வு வழுக்குகளோ,
வரதட்சணை என்ற பெயரின் வழக்கால், அழிந்த குடும்பமோ...
காசுக்காக மட்டுமே, மணம் முடித்த, விவாக இரத்துக்காய்,
விதியிழந்த தோழரையோ, அறிந்திருக்க முடியாது.

இங்கு காமம் வணிகமாய் மாறிய காரணம்,
வணிகம் கவர்ச்சியால் வளம் பெற்ற காரணம்,
எப்பாலும் தவறுகள் இழைத்திட காரணம்,
எல்லாமும்.. ஆண்கள் என பிழைபட்ட கூற்றுகள்..

ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளிந்து,
அறிவு செறிந்த நேரம் போம்,
இன்று செவி செய்தி கேட்டு, உறுதி பேசி
கேட்பார் குழந்தையாகினோம்..

திருநங்கையருக்கு நாம் நாளெடுத்த காலத்தும் முகப்புத்தகத்தில்,
வானவில் ஏந்தி, வாழ்த்து சொன்ன தோழர் கூட
ஆண்களுக்கு ஆதரவாய் இருந்ததில்லை.

அன்பு தோழரே...
உமது அங்கீகாரத்திர்காய் யாம் என்றும் இருந்ததில்லை...
வலிகளும், வடுக்களும் என்றும் புதிதில்லை...
எம்மிலும், வலுவிழிந்தோர் உண்டு,
அறிவிலி சட்டங்களால் அவலம் உறுவோர் உண்டு...

இங்கு இதயநோயும், மனநோயும் ஆண்களுக்கே அதிகம் உண்டு,
நாங்கள், உறுதி அதிகம் கொண்ட, ஊமையர்கள்,
நாங்கள் அழவோ, புலம்பவோ, வருத்தம் காட்டவோ
பழகவில்லை, அதை காட்ட ஒரு துணையும் இல்லை...

எல்லா சமுதாயத்தும், எல்லோரும், எப்போதும், உண்டு,
கயமை உள்ளவாரே கல்வியாலர் உள்ளார்,
புல்லர், உள்ளவாரே புலவரும் உள்ளார்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு வினையெச்சமே

நாம் காலச்சுவடுகள் காலத்தாலே பண்பட்டவை...
ஒவ்வொரு நிகழ்வின் பின், ஒரு நியாயமும், காரணியும்,

இந்த நாட்கள் எங்கு வந்தது?  வணிகமோ? அரசியலா?
ஆண் தினம் கொண்டாடப்படாது...
வாட்ஸ்பம் வேடிக்கையாய் மறைந்துவிடும்.
எந்த ஆணும் அதை விரும்பவும் மாட்டான்.

எதிர் மறை கருத்துகள், என்றும் புரிதல் தரும்,
ஆயின், , இன்று புரிந்தது எல்லாம் வலித்தது..

அடையாளம் இல்லாத ஆண்மையே... 
உடல் வலிவு கொள்...
உளம் செறிவு கொள்..
அறத்திமிர் கொள்..

சமுத்திர காற்றாய், விரித்திடு உன் வட்டத்தை,
நீ உயிர் கொடுத்து காக்கும் மனையும், குழவியும்,
உயிர் கொடுத்து வளர்த்த தந்தையும் தாயும் கூட
உன் மனம் அறியும் காலம், ஒருக்காலும், இல்லை...

உமக்கு இரங்க இச்சமுதாயம் வெட்கம் கொள்ளும்,
உனை பரிகாசிக்கும், குறை சொல்லும்,

வலியை வலியாய் மாற்று,
அடையாளம் உணக்கு வேண்டாம்
அன்பே பொழி...
உன்னுள் அமைதி கொள்...

Friday, November 16, 2018

அப்பப்பா அப்பா


சிங்கார சென்னையின் சித்திரை வெயிலே...
கோலோச்சும் தலைவ, கோபத்தின் புயலே..
வள்ளுவம், சைவம் வாய்த்தமைந்த நிலையே,
பவள விழா, பதிற்றுப்பத்தாய் சிறக்க எம் விழைவே

சிவந்த விழி, துடிக்கும் உடல், மிடுக்கு நடை அழகே,
தெறிக்கும் குரல், அடிக்கும் அடி, பின் அணைக்கும் நகை உமதே.
வலிக்கும் அன்பு, இனிக்கும் பலா, மறுப்புமக்கு இலையே,
களிக்கும் நிலை, கவலை நிலை, கடந்த நிலை உமதே..

அரச நிலை, ஆடல் பாடல், அலுத்து விட இலையே,
புலவர் பலர், புரவலர் நீர், சரித்திரங்கள் நுமதே
அடுத்த வேளை பசி முன்னர், அமுது தரும் துணையே,
வாழ்வெனில் உம்போல் வாழ வரம் பெற்றீர், நலமே

கணக்கிலா செல்வம், கணக்கெடுத்து காத்தீர்,
உணர்வினை உரைத்திடினும், பிணக்கிலாது வாழ்ந்தீர்,
தனக்கிலா தனை கண்டு தளிர் நடை மீண்டும் கொண்டீர்
இணையாலா என் ஈசன், எந்தையாக கண்டேன்...

Friday, September 28, 2018

சுவர்.

பதிநான்காம் மாடியில், பளிங்கு கண்ணாடி வழியே,
விண்ணுயர்ந்த கட்டிடங்கள்... மெட்ரோ மனிலா... மண்ணிலா? விண்ணிலா?
ஒளி பாய்ச்சும் விளிக்கொளிகள்... வழி எங்கும் விழி ஏங்கும் வாகனங்கள்...

என்றும் பெண்மை பேரழகு, இங்கு அதனில் ஒரு சிறப்பு,
வியப்பெய்யும் வண்ணம், வியர்வையை காணவில்லை,
பூச்சொட்டிய பூ முகங்கள், மணம் வீசும் மங்கையர்கள்,

இங்கு ஆடம்பர கார் மட்டும் அணிவகுக்க,
இரு சக்கர வண்டியின் இதயங்கள்  ஆர்ப்பரிக்க,
இரவும் இளமையும் இண்பத்தால் திளைத்திருக்க...

இங்கு தெருவெல்லாம் திருவிருப்பால்,
குப்பை நான் கண்டதில்லை, சகதி
குட்டையாய் நீர் தேங்கவில்லை,

நடந்து வரும் வழியில், நெடிய ஓர் சுவருண்டு,
விருப்பு வழி கடந்து, விழி சுழற்றி பார்த்தேன்,
மண்ணுடன் வாழும் மக்களும் இங்குண்டு

குப்பை வண்டி மீதிலும் கும்மாளமிடும் ஒரு கூட்டம்,
வெயிலில் வேலை செய்து, வியர்வை சிந்தும் ஒரு கூட்டம்,
உடல் உழைப்பு அன்றி, உடலை விற்கும் ஒரு கூட்டம்.

இரண்டு உலகின் இடைய, மிக பெரிய சுவருண்டு
அதை நான் வியந்தே பார்த்திருந்தேன்...
எட்டடி இருக்கும், அதை தாண்டி அடர் மரங்கள்,

சுவர் உடைந்தால், எல்லாம் சரியாகுமோ?
சுவர் தானே இந்த பாகுபாடு வகுத்தது,
சுவர் சிரித்தது...

சிந்தனை சிறப்பின்றி, மனிதன் மனச்சுவற்றில்,
ஏழ்மையும், தாழ்வையும் தானே செய்திட்டான்,
நிந்தனை எனை செய்ய, நீயா! என்றது போல்

சுவர்...  கண்ணாடியானது

Wednesday, August 15, 2018

சுதந்திரம்


சுதந்திரம்,

தேசிய கீதம் பாடும் போது, ஊசி முனையாகும் உடல் உரோமம்,
தேசிய கொடியினை காணும் போது, தேக்கிய நீராகும் கண்கள்,
இரகுமான் இசையின் நம் இந்தியா அது ஒன்றுதான்  என கேட்கும் போது
வெடிக்க துடிக்கும் இதயம், நானும் இந்தியன் ...

ஒரே உலகினை துண்டு துண்டாக்கி,
இயற்கை எதிராய் எல்லைகள் வரைந்து,
இது எனது, அது உனது என வரப்பு அமைத்து,
மக்களை காப்பது ஒரு நிலைப்பாடு.

நாடா வளத்த நாடுகள் இருந்தால்,
நமதாக்கி விட்டால்,  நலம் என்பதால்,
எண்ணையும், இயற்க்கையும் உள்ள நாடுகள்,
எதிரி நாடாய் மாறிய நிலைப்பாடு,

நல்லை ஆடவர், நல்லை நாடிருந்தால்,
மண்ணையும், மாண்பையும், மொழியையும் காப்பர் எண்பதால்,
மாண்பையும், மொழியும் மக்க அழித்து பின்
மண்ணை மட்டும் தமதாக்க ஒரு நிலைப்பாடு,

குடி உயர, கோன் உயரும், 
இக்குலம் அழிந்து, இங்கொரு கோன் வாழ்வான், ஏனென்றால்
பொருளாதார புரிதல் இல்லையென,
புல்லறிவு பேசும், ஒரு நிலைப்பாடு

இயற்கையின் மாண்பு,
வலியவர் வாழ்தலும், எளியவர் வீழ்தலும்
மனிதத்தின் மாண்பு,
சுற்றமும், நட்பும், சமூகமும் சிறத்தல்

இன்று, நீருக்கும், காற்றுக்கும், கடலுக்கும்,
சோற்றுக்கும், வேலைக்கும், உழலும் என் மக்கள்,
வாழும் மண்ணில் மாற்றார் ஆவர்,
அப்போது, நாம் உலக மக்கள் என வரும் ஒரு நிலைப்பாடு.

இலங்கை, சிரியா, நைஜீரியா, திபெத்து,
ஹாங்காங், மியன்மார், க்யூபா, சோமாலியா,
தன் நாடென்றவர் இன்று, உலகையே நாடாக்கினர்.
வரவேற்பு சிறிதெனினும், வாழ புலம் பெயர்ந்தார்.

காலத்தின் மாற்றத்தில் காட்சிகள் மாறும்,
மன்னனோ, (பிரதம) மந்திரியோ, மாறலாம்,
மக்கள் மாண்பு சிறந்தால் அது  நாடு.
மனிதம் திண்டாடினால், இடுகாடு

நண்பா விழித்தெழு, நலமும்,
வளமும், நுட்பமும், திறனும் இருந்தாலே,
நாளை உன் வாழ்வின் வெளிச்சம் இருக்கும்,

இந்த நாடு, நீயும் நானும்,
நாடு உயர்தினை ஆனது, உன் உயிர்மையால்,
நாட்டிற்கு வாழ்த்து சொல்ல,
நாம் தயாராவோம்,

நண்பா... உனக்கு இன்று, உரக்க சொல்...
நீ சுதந்திரன்,

பிறர் வாழ்வில் வளம் சேர்க்க, மகிழ்விக்க,
மண்ணையும், வளத்தையும், மாண்மையும் காக்க ,
நம் கல்வியும், வித்தையும் தலைமுறை தாண்ட,
காவியம், காப்பியம், சரித்திரம் படைக்க,

நீ சுதந்திரன்.. சுதந்திர நினைவில் வாழ்த்துகள்.

வலி


வலி,
எனது வாழ்வினில்,  விதை நீயே... வளர்ந்தாயே
வலி,
எனது நனவிலும், கனவிலும் நீயே... நிறைந்தாயே...
வலி,
அன்பு கொண்ட உள்ளம், என்னை அகன்று சென்ற போதிலும்,
அறிவும், உழைப்பும் இருந்தும், என்னை ஆக்கம் நீங்கி போதிலும்,
எனது செறுக்கினை, முறுக்கினை காலம் கொன்ற போதிலும்,
எனது கனவினை, உயிர்ப்பினை, நாளும் நனவு மாற்றும் போதிலும்,
வலி...
என் சிந்தையும், சீற்றமும், சொல்ல வார்த்தை பொய்த்ததும்,
பெற்ற சுற்றம், நட்பு, எனது அன்பின்  பொய்த்து போனதும்,
என் கடவுளும், தவமும் இன்று கருத்து மாறி காய்ந்ததும்,
என் கவிதை, தாளும் கோலும் இன்றி கரைந்து போன காலமும்
வலி...
எனது வடுக்கள், எனது வருத்தம்,  தரும் வலிகள் , அது கனக்கும்,
கால சுவடு , வாழ்வின் சருக்கம், என்னை உய்க்கும், அரவணைக்கும்,
வலி...
வாழ்வின் இலக்கணம், காலத் திருத்தம், ஊக்கம் விளைக்கும், இது நிலைக்கும்
எனது களிப்பு, கவலை  பிறக்கும் விளிம்பின் வரும் விருத்தம்,

வலி....
உடைந்த உள்ளம் உறுதி கூட்டும்; நிறைந்த தெளிவு அறிந்து நாடும்,
தளர்ந்த உள்ளம், திறனை கொள்ளும்; தகர்ந்த கனவு நனவில் வாழும்,
உலர்ந்த இதயம், தெளியும், மலரும்; உவப்பர் எண்ணம் உவகை கூடும்,
கடந்த காலம் கல்வி கூறும்; வலிகள் வாழ்வின் வளமை காட்டும்
வலி....