குனித்த புருவமும், கொவ்வை செவ்வாய் குமிழ் சிரிப்பும்,
எனது ஐயனுக்கு மட்டுமில்லை, தோழிக்கும் உண்டு,
கனிவின் மனம் உண்டு. கள்ளமில்லை. பிறர் மனம்
மகிழ உளம் உண்டு. மாசில்லை. தோழி நீ வாழி.
தனக்கென வேண்டுதல் அவா. பிறர்கென எண்ணுதல் அன்பு,
உதடுகள் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தையும், எதிர்
உள்ளவர் உள்ளம் களிக்க வைப்பதால், அன்பினை
அலைபரப்பும் அலைவரிசை நீ. தோழி நீ வாழீ.
உவப்ப தலைகூடல், உள்ள பிரிதல்
கலைஞருக்கு மட்டுமில்லை, கணினியருக்கும் தான்,
உடன் இருந்த நாட்கள், உவகை உவக்கும்
உலகை சுருக்க மனம் நினைக்கும்.
மாய மந்திர மோதிரம் இருந்திருந்தால்,
கூடு பாயும் கலை நான் அறிந்திருந்தால்,
வெட்டியாய் இருக்கும் நேரமெல்லாம், உங்கள்
பக்கத்திலே வந்து கதை அளந்திருப்பேன்.
அண்மையில் இல்லாதவரை மறப்பது இயல்பென்பர்,
நுண்மையின் நினைவினில் அன்பினை பகிர்ந்தீர்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினாய்,
தோழீ நீ வாழீ.
No comments:
Post a Comment