Friday, May 1, 2015

உழைப்பாளர் தினம்

நாட்கூலி, வாரக்கூலி, மாதக்கூலிக்காய்,
 நா தவிக்க, உடல் வியர்க்க, மனம் கருக்க,
நாட்தோறும் நாட்தோறும் உழைத்த கூட்டம்,
  நாதியின்றி நியாயம் சொல்லி வளர்ந்தும் வாட்டம்.

உழைப்பாளர் தினமென ஏனிங்கே வைத்தார்கள்?
   உழைப்பின் ஊதியம், ஊதும் உமித்தோல்.
பிழைக்க தெரிந்தவர் யாரும் இங்கே உழைப்பதில்லை,
   பிறர் உழைப்பினை உறிஞ்சாது தழைப்பவரில்லை.

நீதி நேர்மை நாணயம் என நீளமாய் பேசி,
   வினைத்தூய்மை, கருமம்   என நீட்டிப்பேசி,
முதலாளித்துவத்தின் அடிமட்டத்தின் மட்டத்தில்,
   முனகாது முடியாது முட்டி மோதி,

பல பல பொய் தானே சொல்லி பயின்ற போதும்,
  பலன் இல்லா, பலம் இல்லா உழைக்கும் கூட்டம்,
சல சலக்கும் சத்தமெல்லாம் சரிந்தே போகும்,
   சந்தையின் விந்தையை நோந்தே போகும்.

உழைத்தாலே உயர்வென ஏதும் இல்லை,
   உலக சந்தையில் உண்மையே இல்லை.
வெறும் உழைப்பிற்கும் மேலாய் உனை நீயும் நினை,
   வியர்வைக்கும் மேலே பயன் தரும் வினை.

சாக்கும் போக்கும் சொல்லி சாமாணிய வாழ்வில்
  சாகாடு வரும் வரை, சாமரம் வீசி
போக்கும், வரவும்  சிறு பொருளும் பேசி
   போகிற போக்கில் வாழலாம் அன்றி

இடுக்கண் அழியாமை, ஆள்வினை எல்லாம்,
  உனக்கே பயன்பட்டால் உயர்வே,
படும் பாடு எல்லாம் விழலாய் வீழ்ந்தால்,
  தன்னலம் தவறில்லை காண். 

No comments: