கவிதை போட்டி.... இளநிலை கல்வி மூன்றாம் ஆண்டில் நானும் பெயர் கொடுத்தேன்... ஈழத்தமிழகம்; சுதந்திர இந்தியா இந்த இரண்டு தலைப்புகளையும் தந்திருந்தார்கள்... கிறுக்கல்கள் தொடர்ந்தது..
இரண்டு முழு பக்கங்களுக்கு கிறுக்கி தள்ளினேன்..... நினைவில் இருந்தது இதுதான்.....
இந்தியாவின் காஷ்மீரை தனியே கேட்டால்,
இன்முகத்தோடு நாம் எடுத்து தருவோமா?
இலங்கையும் குடியாட்சி நாடே
இதில் தமிழர்க்கும் பிறருக்கும் ஏன் வேறுபாடே
ஒரு நாட்டு சோதரராய் வாழ்ந்தால்,
பிற வேற்றுமை யாவும் தீயில் எறிந்தால்,
திரு செய்யும் தமிழர்கள் தெருவில் வீழமாட்டார்
அந்நியராய் பிற நாட்டில் அவதியுற மாட்டார்.
கரு..... தமிழர்கள் அமைதி உடன்பாடு மேற்கொண்டு, ஆயுத போரை கைவிட்டு, சமரசமாக வாழ வேண்டும் என்பதே..... மற்ற வரிகள் நினைவில் இல்லை.....
கவிதை போட்டியன்று, உரத்த குரலில், ஒழுங்கான உச்சரிப்பில், கவி படித்து முடித்தேன்.... என்னுடைய வகுப்பறை மாணவர்கள் உரத்த கையோசை எழுப்பினர்.... நல்லா இருந்ததா? ... ஒன்னும் புரியல, ஆனா தமிழ்ல அழகா படிச்ச என்று புகழாரம் சூட்டினான் என் நண்பன்....
என்னுடைய சீனியர்.... சுதந்திர இந்தியா என்ற தலைப்பில் ஒரு கவி எழுதினார்....
இங்கு மட்டுமே கோட்டைக்கு கோடம்பாக்கம்
குறுக்கு வழியாகிறது...
இங்கு இளைஞர்களின் ஏக்கம்,
சிம்ரனின் இடுப்பளவிலேயே இருக்கிறது...
இன்னும் நிறைய... நினைவில் நின்றது சிம்ரனின் இடைதான் ;) அவரது ஏக்கம் சினிமாவிற்கு அளவுக்கதிமாக தரப்படும் ஊடக மதிப்பீடுகளும், அதனால் ஏற்படும் கவனச்சிதறல்களும்......
அன்று அவர் முதல் பரிசையும், நான் இரண்டாம் பரிசையும் பெற்றோம்.... போட்டிகள் முடிந்து, வெளியே வரும் போது, ஒரு நண்பர் வந்தார்... நடராசன், கவிதை எல்லாம் நல்லா பாடினீங்க.... அங்க நடக்கிற உண்மை நிலை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்.... . இல்லைங்க.. செய்திகளின் வாயிலாக தெரிந்தது மட்டுமே என பதில் உரைத்தேன்.... (இந்து நாளிதழ் மட்டுமே என்னுடைய வெளி உலக ஞானம்).. …. தன்னுடைய அத்தை மகனை, கைக்குழந்தையை ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் கொதிக்கும் தார் உருளையில் முழுகடித்து கொன்றதாக அவர் என்னிடம் கூறினார்.... இத்தனை கொடுமையா? என்னால் எதுவும் பேச முடியவில்லை.... I am Sorry என்ற வார்த்தையை உரைத்து, அமைதியில் நேரத்தில் கரைத்தேன்....
பல வருடங்கள் கழித்து, இலங்கை இன பிரச்சினையே விக்கிப்பீடியா, ப்ளாகுகள், மற்றும் இணையத்தின் வழியாகவே உணர்ந்து இருக்கிறேன்....
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் “விடை கொடு எங்கள் நாடே” என்னும் பாடலை கேட்கும் போது, கண்ணீர் கன்னத்தில் முத்தம் கொடுக்கும்... எத்தனை வலி....
சிறுபிள்ளைதனமாக முன்பெல்லாம் நிறைய கேள்விகள் எழும்... தமிழர்கள் அரசாட்சியில் போட்டியிட்டு பங்கேற்கலாமே! அவர்கள் இந்தியாவில் தமிழகம் இயங்குவதை போன்று ஒரு ஆட்சியை நிறுவலாமே! எதற்காக ஆயுத தாக்குதலை மேற்கொள்கிறார்கள்.. என்றெல்லாம்...
அடக்குமுறை என்பதும், அதிகார வன்முறை என்பதும், அரசியல் சூது என்பதும் அதிகப்படியாக நடக்கும் நிலையில் வேறு வழியேதும் இல்லாமலே அவர்கள் ஆயுத போரை எடுத்துக்கொண்டார்கள் என்பது ஊடகமாக புரிந்தது....
வவுனியா, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு போன்ற இடங்களில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக விண்ணப்பிக்க, தமிழில் இருக்கும் பிறப்பு சான்றிதழ்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழி பெயர்ப்பின் போதே மனம் நெகிழும்..... பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு, மற்றொரு இடத்திற்கு குடி பெயர்வது எவ்வளவு பாரமான ஒரு செயல் என்பதை நான் பல முறை உணர்ந்ததுண்டு..... இந்த நண்பர்களுக்கோ வாழ நினைத்தாலும் வேறிடம் செல்ல வேண்டிய கட்டாயம்.... செல்லும் இடத்தில் அகதி என்ற நிலை... இந்தியவோ, நெதர்லாந்தோ ... அவர்கள் வாழ்க்கை தரம் பூர்வீக நாட்டில் இருப்பது போல் இருக்காது என்பது உறுதி....
எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் தானே? ஒவ்வொரு சமவெளியும் ஒரு காலத்தில் கொழுந்து விட்டெரியும் எரிமலையாகத்தானே இருந்தது....
தமிழர்கள் என்ற நிலை மட்டுமல்ல. மனித நேயம் என்ற நிலைப்பாட்டிலேயே, எங்கும் யாரும் வாழும் உரிமை வேண்டும். ஆனால், நம் நாட்டிலேயே மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவிலும், ஒரிசாவிலும், நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது, இலங்கை மட்டுமல்ல, இந்தியாவிலும், மனிதத்துவத்தை மதிக்கும் குணம் முழுமையாக இருப்பதாக தெரியவில்லை. .
நம்மால் முடிந்தது..வாய்ப்பு கிடைத்தால், உரியவருக்கு உதவிடலாம்... . பிள்ளைகளுக்கும், சிறுவர்களுக்கும் பேச்சுவாக்கில் வேறுபாடு இல்லாமல் பழகுவதை குறித்த சிந்தனைகளை விளைவிக்கலாம்.... பிற கலாச்சாரங்களின் சிறப்பையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் விளைவிக்கலாம்... அமைதி திரும்பும், மனித நேயம் மலரும் என்றும் காத்திருப்போம்... இலங்கையில் மட்டுமல்ல... இந்தியாவிலும்... உலகெங்கிலும்... காலம் கனியட்டும்.. விரைவில்.
5 years ago
7 comments:
தமிழர்கள் அரசாட்சியில் போட்டியிட்டு பங்கேற்கலாமே! //
இந்த கேள்விக்கு தற்போது விடை தெரிந்திருக்கலாம்.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழர்கள் ஆட்சியில் அமர முடியாதவாறு - அவ்வளுவும் ஏன் எதிர்கட்சியாக கூட வரமுடியாத வாறு செய்திருக்கிறார்கள்.
இனங்களுக்கிடையிலான விகிதாசாரப்படிதான் அங்கு பாராளுமன்றம் செல்ல முடியும்.
200 (தோராய கணக்கு)பேர் உள்ள பாராளமன்றில் 150 பேர் கட்டாயம் சிங்களவர்கள். 50 பேர் மட்டுமே தமிழர்களில் செல்ல முடியும். (அதாவது 3/4 பங்கு சிங்களவர். 1/4 பங்கு தமிழர். )
இந்த லட்சணத்தில் ஆட்சிக் கட்டிலாவது மெத்தையாவது!
150 இல் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் உருவாகி விடும். நாம் யாருடைய வாலையாவது பிடித்து தொங்க வேண்டியதுதான்.
மாநில சுயாட்சியையும் அரசியல் சட்டம் தடை செய்கிறது. அவ் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். கிட்டத்தட்ட 140 ஆதரவு!
50 பேரை வைத்து நாக்குத்தான் வழிக்க முடியும்!
இந்த நிலையில் பிரச்சனையை ஆயுத வழியில் தீர்க்க முடியுமென தமிழர்கள் நம்புகிறார்கள். இல்லை சமஸ்டி தரலாம் என்றால் அதை சிங்களம்தான் தரமுடியும். நம் கையில் எதுவும் இல்லை
//அவர்கள் வாழ்க்கை தரம் பூர்வீக நாட்டில் இருப்பது போல் இருக்காது என்பது உறுதி....//
உண்மை... :(
உண்மைதான் சயந்தன்... நம் கையில் ஏதுமில்லை... ஆனால், நல்லதே நடக்க வேண்டும் என நம்பிக்கை... ஏக்கம் மட்டும் :(
நன்றி சயந்தன்,நன்றி தூயா... வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும்.
ஆயுதம் எடுக்கா விட்டாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் போராடியே எதுவும் கிடைக்கும் என்ற நிலையை அனுபவித்தும் கூடப் புரிவது கடினம்.
உங்கள் நாட்டில் நீங்கள் படித்தால், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரிகளில் சேரலாம். ஆனால் இருந்த இளைஞர்களின் நிலையில் அவர்கள் சிங்கள இளைஞர்களை விட எவ்வளவோ அதிகம் மதிப்பெண் எடுத்தாலும் கல்லூரிகளுக்குப் போக முடியாது.
இலங்கையில் குறிப்பிட்ட ஒரு துறைக்கு அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே வெட்டுப்புள்ளி; ஆனால் அது தமிழ் மாவட்டங்களுக்கு அதிகம். அந்த நேரத்தில் பலரை இது விரக்தி அடைய வைத்துப் போராட்டத்திற்கு அனுப்பியது.
ஒரு இனத்தவர் திட்டமிட்டு வரலாற்றைத் திருத்தி எழுதி பல இனத்தவரும் வாழும் நாட்டைத் தங்கள் நாடாக சில தசாப்தங்களில் மாற்ற எடுத்த முயற்சியை எதிர்க்க முனைந்ததே அடிப்படைக் காரணம் என நினைக்கிறேன்.
சாத்தனந்தன்,
வருகைக்கு நன்றி.. உங்களுடைய பின்னூட்டத்தை படிக்கும் போதே கனமாய் இருக்கிறது. காலம் தீர்வுகளை சீக்கிரமே அளிக்கட்டும் ;(
very sensible post. unarchi konthalipu ellamal, sensible post with politness. padika pudichirunthuchu karuthum manasula otikichu
Post a Comment