அங்கே தீபாவளி... இங்கே ஞாயிற்றுகிழமை...Laundry, Housekeeping எல்லாம் முடிச்சாச்சு...கொசுவத்தி மேட்டரே கன்ட்ரோல் பண்ணவே முடில..... எவ்வளவு நேரம்தான் நானும் கொசுவத்தி சுத்தமுடியும்.. அதுதான் கிறுக்கி தள்ளிடுவோம்னு ;)
காலை 4 மணிக்கெல்லாம் அப்பா எழுப்பி விடுவார்... முதலில் யார் பட்டாசு கொளுத்துவது என்ற ஒரு குஷி... நமக்கு முன்னாடி யாராவது கட்டாயம் எழுந்து ஒரு லக்ஷ்மி வெடியோ அல்லது ஒரு பாமையோ வெடித்து வெறுப்பேற்றுவான்... நாங்களும் எழுந்தவுடன், நமக்கு தரப்பட்டுள்ள மிளகாய் பட்டாசு இரண்டை, பூஜை அறையில் இருக்கும் ஊதுவத்தியை வைத்து கொளுத்தி நாங்களும் வெடிச்சோம்ல என அறிவிப்போம்.
அடுத்து எண்ணைக்குளியல் ;) வீட்டிலேயே Boiler ஒன்று இருக்கும்...தேங்காய் ஓடு, தென்னை நார், காய்ந்த விறகுகள் எல்லாம் சேர்ந்த ஒரு Fire Tube Boiler (fire inside the tube surrounded by water) அதற்குள்ளே கொஞ்சம் உப்பை போடுவது, தேங்காய் ஓடு எரியும் போது கேட்கும் உஸ் சத்தம் இதிலேயே ஒரு மணி நேரம் ஊறி விடுவோம்... சீயக்காய், புங்கங்கொட்டை எல்லாம் சேர்த்து அரைக்கப்பட்டு (நிஜமா... மீரா ஹெர்பல் எல்லாம் இல்லை) அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து தலையில் தேய் தேய் என தேய்ப்பார்கள்... யப்பா .. இந்த எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வெறுப்பதன் ஒரே காரணம் இந்த ஒரு மேட்டர்தான்... தலைமுடியெல்லாம் வலிக்கும்... விடமாட்டாங்க.. ;) அது முடிந்ததும் ஒரு குட்டி வழிபாடு... சாப்பாடு.. அப்புறம் டைம் ஓடிடும்...
அப்போது வீட்டில் பொட்டி (கம்யூட்டர் இல்லங்க.. டி.வி. கூட) இருந்ததாக நினைவில்லை. தீபாவளி அன்று பேரளவில் சில பட்டாசு வகைகள் கிடைக்கும்... சில சுறுசுறுவத்திகளை சுற்றி சுற்றி பற்றவைத்தும், மிளகாய் பட்டாசை கொளுத்திப்போட்டும் தீபாவளி ஓடிப்போய்விடும்..
அன்றைய மாலையில், புதுப்பானையில் பாகு வெல்லம் காய்ச்சி, அதிரசம், அது மட்டுமல்லாமல், முறுக்கு, பணியாரம், அப்பம் அனைத்திற்கான foundation வேலைகளும் நடக்கும்.
அந்த அதிரசம் தட்டும் வேலை இருக்கிறதே... யப்பா... நினைவிருக்கும் கடந்த ஆண்டுகளில், முதலில் தட்டும் போது கொஞ்சம் சுலபமாக இருக்கும்.. போக போக கட்டியாகிவிடும். விரல் வலிக்கும்... அதில் தண்ணிர் அல்லது எண்ணை சேர்த்தால் பிரிந்துவிடுமாம்.. . முதலில் நான்கைந்து பேர்கள் சேர்ந்து தட்ட துவங்குவார்கள்... கடைசியில் பார்த்தால், பெரும்பாலும் 2 அல்லது 3 பேர் இருந்தால் அதிகம்.. .
இரண்டு அண்டா (அதாவது பெரிய பாத்திரம்) சில பல தூக்குகளை (அது மீடியம் சைஸ் பாத்திரம் ... தொங்க ஏதுவாக ஒரு பெரிய Handle இருக்கும்) அனைத்தையும் இந்த பலகாரங்களை கொண்டு நிறைத்த பின்னர் ஒரு 10 அல்லது 11 மணி அளவில் தூக்கம்....
பூவிருந்தவல்லி (அதாங்க பூந்தமல்லி) தாத்தா வீட்டில் இருந்த வரை... தீபாவளி விட நோன்பு பண்டிகைதான் சிறப்பு... ஒரு காலத்தில் பண்டிகையின் போது ஒன்றாக சேரும் குடும்பத்தினர் எண்ணிக்கை ... நூறு பேர் வரை போனதாக நினைவுண்டு..... காலை ஒவ்வொருவரா வரத்தொடங்க... சமையல் கட்டில் அம்மா தலைமையில், வடை குழம்பு, மோர் குழம்பு, உருளைகிழங்கு பொரியல் உட்பட்ட பல சாப்பாட்டு ஐட்டங்கள் அமைதியாக தயாராகும்
அத்தனை பேருக்கும் சிற்றுண்டி முடிந்தவுடன், சேர்ந்து வழிபாடு நடக்கும். எப்போதும் போல அப்பாவும், பெரியத்தையும், புதுபுது பதிகமாக பாடி வழிபாட்டை பெரிதாக்க, சிறியவர்கள் எல்லாம் எப்போது வழிபாடு முடியும் என மானசீகமாக வேண்டி வழிபாடு முடியும்போது கடவுள் கருணை காட்டிய பெருமையை எண்ணி, பூரிப்போம்.
அது முடிந்தவுடன் சாப்பாட்டு பந்தி, பந்திக்காகவே ஓலைப்பாய்கள் சில இருக்கும். அது போதாதென்று, Bed Spread சிலவற்றை மடித்து, விருந்தினர் அமர, சாப்பாட்டு விழா தொடங்கும். ஸ்பெஷல் ஐடங்களான குழம்பு வடை, தயிர் வடை, அப்பம் பரிமாறுவது குஜால்ஸ்...
உறவினர்களுக்கு கொடுத்தனுப்ப ஏற்கனவே வாழையிலையிலும் பத்திரிக்கை தாளிலும் பார்சல் செய்யப்பட்டு இருக்கும், அது இல்லாமல், வீட்டிற்கென சில பெரிய பாத்திரங்களில் இன்வென்டரி கன்ட்ரோல் செய்யப்பட்டு இருக்கும்.
எங்கள் சிறிய அத்தை குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஒரு 1000 சர வெடியை கொண்டு வருவார்கள்... அதோடு சேர்த்து நாமும் நம்முடைய மிளகாய் வெடியின் திரியை கிள்ளி 5 அல்லது 6 வெடிகளை ஒன்றாக சேர்த்து மினி சர வெடியெல்லாம் வெடிப்போம்... நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என எப்போதும் ஆசையாக இருக்கும்... அப்பாவிடம் கேட்டால், காசை கரியாக்காதீங்க.. என்ற பதில் பல ஆண்டு தீபாவளியும் கேட்டிருக்கும்... பள்ளி நாட்கள் முடியும் போதே பட்டாசு மேலிருந்த ஆர்வமும் குறைந்து விட்டது... ஆனால், சென்னை வந்த பிறகு, தீபாவளி அன்று இரவு, மொட்டை மாடியின் மேலே, அல்லது தண்ணீர் தொட்டியின் மேலே படுத்துக்கொண்டு வான வேடிக்கைகளை வேடிக்கை பார்ப்பது, ஒரு அழகான அனுபவம்..
டாலஸில் இருக்கும் போது, அமெரிக்க சுதந்திர நாளின் போது வான வேடிக்கை (அதாவது நிஜமான வானவேடிக்கை) முதல் முறையாக நேரில் பார்த்தேன்... சும்மா கலக்கல்... 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து வானத்தில் வண்ணக்கோலங்கள்... அதுவாவது பராவாயில்லை... இப்போ ஹவாயில். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும், 10 அல்லது 15 நிமிடங்கள் வானவேடிக்கை.. என்னுடைய அபார்ட்மென்ட் லனாய் (balcony in hawaiian) இல் இருந்தே அழகாக தெரியும்... முதலில் 2 வாரங்கள் வேடிக்கை பார்த்தேன்... இப்போது வெடி சத்தம் கேட்டாலும் .. .அட போடா.. என அசையாமல் இருக்கிறேன்...
ஆனால், மனதிற்கு, 10 ரூபாய் கிடைத்தவுடன் பக்கத்து கடைக்கு சென்று ஏதாவது ஒரு பட்டாசை வாங்கி, எங்கள் வீட்டின் எதிரே அதிக பட்டாசு குப்பை இருக்கிறது என நிரூபித்த காலமே சுகமாக இருக்கிறது...
உறவுகள் கூடவும், உள்ளம் களிக்கவும், உள்ளது சிறக்கவும், உவகை பெறுகவும்... அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
5 years ago
No comments:
Post a Comment