இன்று தந்தையர் தினம்....
தொழிலாளர் தினம், காதலர் தினம், எத்தனை தினங்கள்...
எங்கிருந்து முளைத்தன இந்த புதிய நாட்கள்?
யார் கொண்டு வந்தனர், யாவருக்காக?
வாணிப ரீதியில் வளம் சேர்க்கவோ,
வரண்டிடும் மனங்களில் ஈரம் சேர்க்கவோ?
எண்ணிரண்டு வருடம் முன்னே இவை ஏதும் பிடிக்கவில்லை...
அன்பினை வெளிப்படுத்த நாள் ஒன்று தேவையில்லை...
ஒவ்வொரு நொடியும் தானே துலங்கிடும்...
அதற்கு வாழ்த்து அட்டையோ, வண்ணப் பூக்களோ அவசியமில்லை...
என்று நான் நினைத்திருந்தேன்.... அப்போது அனைவரும் அருகில்
இன்று நான் தனிமையில்,
வடிகட்டிய வார்த்தைகள்...
இயல்பை இழந்த நடைமுறைகள்...
சூழலுக்கேற்ற வழிமுறைகள்....
என்னை இழந்து நான்...
உரக்க பேசவோ, உணர்வை கொட்டவோ
வடிகால் இல்லாத, வரம்புக்குட்பட்ட,
பழைய சுவடுகளால், பண்பட்ட
என்னை இழந்த நான்...
தந்தை நினைவுகளில்..
தந்தையான நான் நினைவுகளில்...
என் இளமை காலத்தில்,
எவர்க்ரீன் சூப்பர் ஹீரோ...
என் தந்தை..
கைகளை மடக்கும் போது, எட்டிப்பார்க்கும் தசை முட்டை ...
தொட்டுபார்த்து மகிழ்ந்த நினைவு.
எங்களை எண்ணையில் மூழ்கித்து,
ஜெயன்ட் ரோபாட் என தலை மீது தூக்கிய நினைவு.
அவ்வப்போது, பக்கத்து தெரு பகோடா வாங்கிவந்து,
சுவையான பால் சாதத்தை, அறுசுவையாக்கிய நினைவு...
ராஜ்டூட் பைக் டாங்கின் மேல் உட்கார்ந்து,
அப்பா பார்வை மறைக்காமல்,
கழுத்தை சாய்த்து உட்கார்ந்தும்,
காற்றின் வேகத்தை கண்ணில் வாங்கிய நினைவு...
மிதிவண்டி கற்றுதர போரூர் ஊர் சென்று,
1 ரூபாய் வாடகை சைக்கிள் ஏறி,
செம்மண் புழுதி வாரிய நினைவு...
வாக்கிங் என்ற பெயரில்,
சற்றே தூரம் நடந்து,
சுவையாக தேநீரும், பட்டர் பிஸ்கெட்டும்,
இரசித்து பருகிய பின்..
சலைக்காமல் பல பேசி...
இளைத்த காலை பொழுதுகள்....
......
அரும்பிய மீசை....
அதிகரித்த குறும்பு,
குறைந்த மதிப்பெண்,
அறையப்பட்ட அடிகள்...
காலை மடக்கி சுவற்றின் ஓரம்,
நாற்காலி நிலையில் நிற்க சொன்னாலும்,
நான்கு எண்ணுவதற்குள் முடியாது என்று,
முறைத்து, முணுகி,
உதை வாங்கிய நாட்கள்....
சும்மா ஒன்னும் அடிக்கவில்லை...
ஒழுங்காக படிக்கவில்லை...
இந்த கணக்கு பாடமும் கடவுள் போலத்தான்...
எந்த நிலையிலும் ஏதும் விளங்கவில்லை...
.................
ஐந்து ரூபாய் தந்தாலும்,
ஏன் எதற்கு கேள்விகள்...
நேரு சொன்னாராம்... நம்பினால் கேள்வியில்லை.. நம்பாவிட்டால் பதிலில்லை என்று...
நான் சொல்லியிருந்தால், இடையணியும் பெல்ட் கையேந்தப்பட்டிருக்கும்...
கோபக்கார அப்பா..... ஆனாலும் பிடிக்கும்....
.....
அவர் கண்கள் நீர் தளும்பி சில முறை நான் பார்த்ததுண்டு...
பல நேரங்களில் நானே அதன் காரணம்...
ஐ. ஏ. எஸ் ஆகனும்.. எஞ்சீனியர் ஆகனும்...
என்றெல்லாம் வளர்த்தாலும்...
என்ன செய்ய... என்னுடைய சோம்பேறி தனத்திற்கு,
கிடைத்தது பேமன்ட் சீட்தான்....
ஆனால் நல்ல விஷயம்.. நானும் எஞ்சீனியரானேன்...
அத்தனை மோசமில்லை... ஏதோ நானும் வளர்ந்துவிட்டேன்...
முடிந்தவரை முயற்சிக்கிறேன்... வாழ்கிறேன்...
லைட்ஹவுஸ் வெளிச்சம் காட்டி செல்லுவது போல..
அப்பா முகத்தில் வெகுசில முறை புன்னகையை, பெருமிதத்தை
என்னாலும் உண்டாக்க முடிந்தது....
இதோ வழித்தோன்றல்...
அப்பாவிடம் வாங்கிய அடிகள் விட இவனிடம் இதுவரையுமே நிறைய வாங்கியுள்ளேன்...
அவன் அடம் பிடிக்கும் போது, நான் அதட்டினால், அப்பாவில் முகத்தில்தான் எத்தனை புன்னகை!
ஹேப்பி ஃபாதர்ஸ் டே...
3 years ago
2 comments:
[வாக்கிங் என்ற பெயரில்,
சற்றே தூரம் நடந்து,
சுவையாக தேநீரும், பட்டர் பிஸ்கெட்டும்,
இரசித்து பருகிய பின்..
சலைக்காமல் பல பேசி...
இளைத்த காலை பொழுதுகள்....]]
அருமையான வரிகள். என் அப்பா தேநீரும், காலையில் சுடச்சுடப்போடும் போண்டா வாங்கித்தருவார். :)) பலவருடங்கள் பின்னோக்கி செல்ல வைத்துவிட்டீர்கள். மிக்க மிக்க நன்றி
[[அவன் அடம் பிடிக்கும் போது, நான் அதட்டினால், அப்பாவில் முகத்தில்தான் எத்தனை புன்னகை! ]]
எக்ஸலண்ட் சார்
இப்படி தொடங்குவதற்கு தயவு கூர்ந்து மன்னிக்கவும்.......
ஏதேனும் துக்க செய்தி கேட்டால்கூட என் கண்களில் கண்ணீர் வருவதில்லை.......
ஆனால் இன்றும் சில எழுத்தாளர்களின் எழுத்து என்னை கலங்கவைக்கிறது, கண்ணீர் விடவைக்கிறது........
உங்கள் எழுத்தைப் படித்ததும் என் கண்களில் இரு துளி எட்டிப்பார்த்தது.
கூட்ட கைத்தட்டல்களைவிட ஒரு துளி கண்ணீர்தான் எழுத்தாளனின் உண்மையான வெற்றி என நினைப்பவன் நான்.
'இந்த கணக்கு பாடமும் கடவுள் போலத்தான்...
எந்த நிலையிலும் ஏதும் விளங்கவில்லை...'
உங்களுக்குள் இருக்கும் கவிஞனின் அழகான வரிகள் இவை....
வாழ்த்துக்கள்..........
Post a Comment