Monday, July 28, 2008

சிமெண்ட் - 2

இதோ.. சிறு கற்களாக இருக்கும் சுண்ணாம்பு பாறைகள்... தூளாக பயணிக்கின்றன... பெல்ட் கன்வேயர்கள் மூலமாக, ஸ்டாக்கிங் அன்ட் ரெக்லைய்மிங் இடத்தில் இருந்து, சுண்ணக் கற்கள், Ball Mill ஒன்றில் ஊட்டப்படுகிறது...



மோட்டார்களால் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு பெரிய உருளை... அந்த உருளைக்குள்ளே பெரிய பெரிய உலோக பந்துகள்.... உருளையின் சுழற்ச்சியால், மேலே வரை சுழன்று, பொத்தென கீழே விழும்... இதன் நடுவே இருக்கும் சுண்ணாம்பு கற்கள் எல்லாம் தூள் தூளாகும்.. .இவ்வளவு தான் ball mill....... இரும்பு குண்டுகளின் எடை, மற்றும் மில்லின் விட்டத்தை பொருத்து மில்லின் சுற்று வேகம் (rotation / revolution per minute) இருக்கும்.


இப்போது தூளான துகள்கள் (ரா மீல் – Raw Meal என்று அழைப்பார்கள்) காற்று மூலம் உறிஞ்சப்பட்டு சுட்டெரிக்கப்படும்....




இந்த சுட்டெரிக்கும் செயல் எல்லாம் Kiln என்றழைக்கப்படும் ஒரு உருளைக்குள்ளே நடக்கிறது... சாதாரணமாக ஒரு 3 டிகிரி சாய்வில் இந்த உருளை சுற்றிக்கொண்டே இருக்கும்... ஒரு பக்கத்தில் காற்றும் , கரித்தூளும் நெருப்பாக அனல் தகிக்க, மறு புறர் ரா - மீல் காற்று வழியாக வந்திறங்க... இப்போது ரா-மீல் தகிக்கும் பாறைகளாக வெளிவரும்... இதை க்ளிங்கர் Clinker என்று அழைப்பார்கள்...




இந்த சுடு கற்களை பக்கெட் கன்வேயர்கள் Bucket conveyers உபயோகித்து கிடங்கில் சேர்ப்பார்கள்... விவசாயத்தில் கேணி இறைப்பார்களே அதே போலத்தான்... இதை வெட்ட வெளியில் கூட சேமித்து வைக்கலாம்...




அடுத்த கட்டம், Cement Mill, உருகி உறைந்த க்ளிங்கர் பாறைகளை மற்றொரு Ball Mill கொண்டு மிக சன்னமான தூளாக - நாம் உபயோகிக்கும் சிமெண்டாக மாற்றம் பெரும் கட்டம்....

இந்த சிமெண்ட் சைலோ (silo) என்றழைக்கப்படும் பெரிய உருளைகளில் பாதுகாக்கப்படுகிறது...

காற்றின் மூலம் பின்னர் பேக்கேஜிங் பிரிவுக்கு இழுத்துச்செல்லப்படும் சிமெண்டு, மூட்டைகளுள் தானியங்கியாக நிரப்பப்பட்டு, இரயிலிலும், லாரிகளிலும் ஏறி நம்மை வந்தடைகின்றன

அன்பு இதயங்கள் இயக்கும் உலகம்...

The world is full of good people

I also feel if you are motivated and show some initiative, people around you will always help you. I also feel there are more good people in society than bad ones. I want all those who read this to feel that if Naresh can achieve something in life, you can too.


நரேஷூக்கு வாழ்த்துக்கள்... மேலும் படிக்க
http://specials.rediff.com/news/2008/jul/28sl1.htm

Friday, July 25, 2008

சிமெண்ட் - 1

எங்கு காணிணும் சக்தியடா.. என்ற வரியில், எல்லா பொருளிலும் அறிவியலின் பிரம்மாண்டம் அதிசயிக்க வைத்த இளமை பொழுதுகளில், திருச்சி அருகே உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் 2 மாதங்கள் In-Plant trainee ஆக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 11ஆம் வகுப்பில் portland cement manufacturing படித்து புரியாத பலவும், சில நாட்களில் பார்த்து புரிந்து கொண்டேன்...

அந்த புரிதலை பதிவாக்க - பத்தாண்டுகள் கழித்து இன்று ஒரு சிறு முயற்சி, இதே வகையில் பலவற்றையும் பதிவு செய்து, ஏற்கனவே தமிழ் பதிவர்கள் இட்டுள்ள அனைத்து நடைமுறை அறிவியல் மற்றும் விளக்கங்கள் குறித்த பதிவுகளை திரட்டி, தமிழ் வழி கல்வி பெறும் மாணவர்களுக்கு power point களாக அளிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம்... என்று நடக்கும் என தெரியவில்லை... இருந்தாலும் இதோ முதல் அடி ...
(இரட்டை அர்த்தத்தில் பேசுவது ஒரு குஜாலிட்டியாதான் இருக்கு... எஸ். ஜே. சூர்யா எவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதுவாறோ?)

இது எவ்வளவு பயனுடையதாய் உள்ளது? அல்லது எவ்வளவு மொக்கையாய் இருந்தது என்பதை பின்னூட்டம் இடவும்... ஓரளவு தமிழ் இணையங்களை தேடிப்பார்த்ததில் howstuffworks போல எந்த ஒரு இணையதளமும் தெரியவில்லை... ஏற்கனவே இதை போல தகவல் தளங்கள் இருந்தால் தெரிவியுங்கள்... Why to re-invent the wheel?





சுண்ணாம்பு பாறைகள்

கடலை தாண்டி ஒரு 350 கி.மீ இருக்கும் திருச்சி, அரியலூர் பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகளின் படிமங்கள்... அங்கு பாறைகளினூடே புதைந்த சிப்பிகள், சங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் அங்கு கடல் அல்லது பெரிய நீர் பரப்பு இருந்ததாக தெரிவிக்கின்றன....


சுண்ணாம்பு படிமங்கள்

நாம் நுகர்வது எல்லாமே இயற்க்கையில் இருந்து வந்த பொருட்களே என்பதை நினைவூட்டும் வகையில், மண் , சிமெண்டாய் மாறும் வித்தையின் முதல் கட்டத்தில்....


செயற்க்கை கோள் படங்கள், மண் மற்றும் பாறைகளின் வேதியியல் ஆராய்ச்சிக்கு பிறகு சுண்ணாம்பு சுரங்கங்கள் (lime stone mines) அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்தப்படுகிறது... பாறைகளின் உறுதியை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற வகையில் Dimensions for Drilling - ஓட்டைகளின் ஆழம் மற்றும் அகலம் கணக்கிடப்படுகிறது, ட்ரில்லிங் முடிந்த பிறகு அதில் நைட்ரோ வெடிபொருட்களை ப்ளாஸ்ட்டிக் பைகளில் ஒயர்களை சேர்த்து விடப்பட்டு, டெட்டோனேட்டர் (ஒரு சிறிய அளவு மின் அதிர்வை தரும் இயந்திரம்) கொண்டு பாதுகாப்பாக வெடிக்கப்படுகிறது...


தூளாகும் பாறைகள்...




அது வெடிக்கும் அழகு பார்த்து பத்தாண்டுகள் கழித்தும் கண் முன்னே நிற்கிறது.... பாறைகளாக மாறிய (Limestone rocks) பூமியின் படிமங்களை பெரிய அளவு டிப்பர் லாரிகள் மற்றும் போக்கலைன் இயந்திரங்கள் கொண்டு சிமெண்ட் ஆலைக்கு கொண்டு செல்வார்கள்...



இங்கு முதல் கட்டம் - Crushing - ஹாமெர் மில் (Hammer Mill) என்னும் நிலையில், பெரிய பாறைகள், சிறிய கற்கலாக மாறுவது... பெரிய சம்மட்டிகளை தொடர்ந்து சுழற்றி சுழற்றி அடித்தால் எப்படி இருக்கும் ? அதே போலத்தான் Hammer Mill….. வேகமாக ஓடும் ஒரு உருளையை சுற்றி பல சம்மட்டிகள்.... மேலே விழும் பாறைகள் 25 - 40 மிமி அளவில் சிறிய கற்களாக ....





இந்த சிறிய கற்கள் பெல்ட் கன்வேயர்கள் மூலமாக ஒரு கிடங்கில் குவிக்கப்படும்.. இதை Stacking - ஸ்டாக்கிங் என்று அழைப்பார்கள்.... இவ்வாறு குவிக்கப்படும் குவியல்கள் சிமெண்ட் ஆலையின் input buffer என்ற முறையில் production fluctions ஐ தவிர்ப்பதாக அமைகிறது...

அடுத்த பதிவுகளில் இந்த கற்கள், தூளாய் மாறி, நெருப்பாற்றில் நீந்தி, மீண்டும் பாறையாய் மாறி, தூளாகி, பையில் அடைபட்டு, எப்படி பலமாடி கட்டிடங்களை தாங்கிடும் ஆற்றலை பெறுகிறது என்ற தகவலையும் பார்ப்போம்.

Thursday, July 24, 2008

பழங்கதைகள் நினைத்து... .

பொய்யான புன்னகை முகமூடி,
தன்னிலை குறித்தே எப்போதும் சிந்தனை...
வேலை வந்தாலும், செலவு வந்தாலும்,
அடுத்தவரிடம் காட்டும் தனி அன்பு...
தேவையில்லாமல் கொடுப்பவன் ஏமாளி எனும் அடைமொழி...
வாழ்விற்கும் புன்னகைக்கும் தொடர்பொன்றும் இல்லை.. .
அது டாலர் மதிப்பிலேயே இருக்கிறது என்ற வாக்குவாதங்கள்....

பணிபுரிவதிலும் பாங்காக அரசியல்,
அப்ரெயிசல் என்ற பெயரில் அழுக்கு பொய்கள்...
முன்னே புன்னகைத்து, நகர்ந்த பின்னர் பரிகாசம்...
பரிகாசம் செய்தியாக உடனுக்குடன் பரிமாற்றம்...

இந்த கூட்டம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை....
இதை நான் இயல்பென்று ஏற்க விரும்பவில்லை...

பழைய நட்புகள் மீண்டும் கிடைக்குமா?

பல் தெரிய பெரும் சிரிப்பு,
கைக்குட்டையில் காசு சேர்த்து,
ஐயங்கார் பேக்கரியில் கூட்டுறவு சிற்றுண்டி
சமோசாவை கூட காக்கா கடி கடித்த அழகு

முணியாண்டி விலாசில் மலிவு விலை பரோட்டாக்கள்...
புறநகர் இரயில் - மூன்று இருக்கையில், ஆறு பேர்..
கரம் பிடிக்கும் கட்டை தொங்கி,
டார்சன் கருத்துவிளக்கம்...

மதிய கட்டுச்சோறு 10 மணிக்கே மாயமாகும்.
பகல் சாப்பாடு, ஆந்திரா மெஸ்ஸில்,
கோங்குரா.. சாம்பார், சாம்பார், சாம்பார், மோர்.. இன்னொரு சாம்பார் என சிரிப்பினூடே வைத்துக்கொண்ட சாப்பாட்டு பந்தயங்கள்...

ஆய்வு அட்டவணை (records) அனைத்தும் நீ முன்னே முடித்தாலும்,
நான் முடித்த பின் கையெழுத்து வாங்கும், நட்பிற்கான இங்கிதம்...
மூன்று மணிநேர தேர்வை ஒரு மணி நேரத்தில் முடித்த பின்னும், எம்முடன் பயணிக்க நீ காத்திருந்த காரணம்...

கல் எடுத்து குறிபார்த்து எரிய, நிசப்தம் ஆகும் சுவற்றுக்கோழிகள்...
நான் அடித்த கல் அவற்றை அடக்கவில்லை என்றால்...
இன்னொரு ரவுண்ட் ட்ரை பண்ண சொல்லும் அன்பு

1 ரூபாய் நாணயம் வைத்து கந்தமாகுமா என ஆராய்ச்சி செய்து,
பல நாணயங்களை தண்டவாளத்தில் தற்கொலை செய்யவைத்த நாட்கள்...
கந்தகமாகவில்லை என அறிந்தும்,
அது metal alloy, இப்போது இருபது பைசாக்களை ஆராய்வோம் என
வரிசையாய் அடுக்கிவைத்து அறிவு வளர்த்த நாட்கள்

உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உளறி,
உவகை பூத்த காலங்கள்....

எதிர்பார்ப்பு எதுவுமின்றி, இயல்பாய் பழக,
இதயத்தில் எப்போதாவது கனமிருந்தால் இறக்கி வைக்க...
இரைச்சலின் அமைதியை கொலை செய்து, சில வார்த்தை இனிமை பேச,
யாராவது உடனே வேண்டும்... நான் நானாக வேண்டும்...

Monday, July 21, 2008

விஞ்ஞானம்

விஞ்ஞானம்... ஒவ்வொரு நொடியும் வியக்க வைக்கும்...

கடந்த பொருட்களை சுட்டிக் காட்டி...
விஞ்சிடும் அளவில் வியப்புண்டாக்கி...

இதோ இது பால் வெளி... .அண்டம் முழுவதும் கோள்கள்...
அந்த கோளில், ஆயிரம் ஒளி ஆண்டு அருகில்...,
அதோ ஒரு மேடு.... இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இங்கு புதிய உயிர் பிறக்கும்...
இந்த சந்திரன் மேலே கட்டிடம் அமைப்போம், சாத்தியம் உண்டு....

ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒலியில் வேகத்தில் பயணிக்க...
உடைகள், உணவுகள், உறைவிடம்,
உள்ளது சிறக்க, உவகை பெருக்க....

மாற்றங்களை மாறாமல் செய்வதால்,
மாபெரும் சக்தியானாய்...
ஏற்றங்கள் பல தந்தாய், தருவாய்,
மேலும் தருவாய்...

மனிதர்கள் நாங்கள்...
அப்படியே ஏற்றக்கொண்டால்,
மரபணுக்கள் கேலி செய்யும்.
குறைகள் பார்ப்பது எங்கள் குலவழக்கம்....

பாலி-எதிலின் வந்தால், சுற்றுச்சூழல் பற்றி சிந்திப்போம்...
மரத்தை காக்க மாற்று வந்தால், பழமை போனது என்று பரிதவிப்போம்...
மரபணு மாற்றி புதிய பயிர் வந்தால்,
வழி வழி பயிரை மாய்த்தாய் என்போம்..
உவற் நீரிலும், உலர்ந்த காட்டிலும்
பயிர் விளைவிக்காத அறிவியல் ஏனென்போம்...

நன்றாய் நாங்கள் இருக்கும் வரை...
மருத்துவ அறிவியல் காசு பார்க்க என்போம்..
மென்பொருள் படித்த ஒவ்வொரு மனிதனும்,
சமுதாய உழைப்பை சுரண்டும் காட்டுமிராண்டி என்போம்..

அணு சக்தி, எரிபொருள். வான்வெளி, கோள்வழி,
பங்கு சந்தை, உலக அரசியல், மரபணு, தொழில் நுட்பம்,
தகவல் தொடர்பு, மேலாண்மை, எல்லாமும் எனக்கே தெரியும்...

நாங்கள் கேள்விகளை கேட்கவும், எதிர்ப்புகளை தெரிவிக்கவும்,
எந்த ஒரு கட்டுப்பாடும் எப்போதும் கொண்டதில்லை...

நாளை வளமாகும், உலகின் குறைபாடுகளுக்கு,
ஒரே தீர்வாக எப்போதும் விஞ்ஞானம் காத்திருக்கும்..
அதற்கு வியாபாரமோ, மனித நேயமோ, அரசியலோ,
எது வேண்டுமானாலும் காரணியாக இருக்கலாம்...

நாங்கள் மாறமாட்டோம்...
நலன்களை எல்லாம், நன்றாய் நுகர்ந்தாலும்,
எது வந்தாலும் எதிர் குரலெழுப்புவோம்...

Tuesday, July 15, 2008

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்



அழகான கவிதை வரிகள்.... அசை போட.....

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, ஏமாற்றி
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக்கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே!

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத,
இடைவெளி அப்போது குறையுமா?


மடியினில் சாய்ந்திட துடிக்குதே....
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை...


கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


கறைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்...

உடலும் அல்லாத, உருவம் கொள்ளாத,
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்...

உனையன்றி வேறோரு நினைவில்லை...
இனி இந்த ஊனுயிர், எனதில்லை...
தடையில்லை, சாவிலுமே, உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா?
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே..


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, மாற்றி

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்,

Tuesday, July 8, 2008

திண்ணை

திண்ணையை பற்றி பதிவர் வட்டத்தை சேர்ந்த பலரும் மிக அழகாக எழுதியதை படித்த தாக்கம், இளகிய இதயத்துடன் இன்றைய கிறுக்கல்கள்....

பூந்தமல்லியில் தாத்தா வீடு - 40 களில் கட்டியதாம்.... வீட்டை சேர்ந்தால் போல 2 திண்ணையும், கொஞ்சம் மதில் சுவர் சேர்ந்தால் போல 2 திண்ணையும் இருக்கும் ^\___ ... நான் முதல் வகுப்பில் இருந்த வரை பூந்தமல்லியில் வாழ்ந்ததாக மென்மையான நினைவுகள்.. திண்ணைக்கு எதிரே நித்தியமல்லி கொடி படர்ந்திருக்கும். தாத்தா வீட்டில் பெரிய முற்றம் கிடையாது... கடன் வாங்காமல் கட்டனும்னு சின்னதா கட்டியதாக, தாத்தா சொன்னதாக, என்னுடைய பெரிய அத்தை சொல்வார். இரு திண்ணைக்கும் இடையே மாடங்களோடு சேர்ந்த ஒரு பெரிய கதவு... கதவின் மேல் நின்று அதை திறந்து விளையாடி அதற்காக உதை வாங்கியது போல் லேசாக நினைவு... பின்வாசல் வழியே நேராக செல்லும் பாதையை முட்டும் வகையில் பெரிய கிணறு... கல் கிணறு... அதில் வாளி கயிறு வழியாக சர்ரென இறங்குவதும், வாளி தண்ணிரில் விழும் சத்தமும், ஏதோ ஒரு அழகு... .

பின்னால் உள்ள தோட்டத்தில், புளிய மரம், அரை நெல்லிக்காய், பூவரசம், செம்பருத்தி, 2 தேக்குமரம், ரொம்ப பிடிச்ச கொன்றை மரம், வாழை மற்றும் தென்னையோடு சுற்றிலும் ஆடாதொடாவும், வேலிக்காத்தானும்.. ஒவ்வொரு செடியும் அழகு....

வீட்டிற்கு பின்னால் உள்ள நிலத்தில் பெரிய புங்கமரமும், கொர்கொலிகாய் மரமும், பம்ப்செட்டுடன் சேர்ந்த கிணரும் இருந்ததாக நினைவு... எல்லாமே அழகு...

மார்கழி மாதம் வந்தால், புல் எல்லாம் வெட்டி, வீட்டின் முகப்பில் சாணம் கலந்த நீர் தெளித்து, கோலம் போடும் அழகு... தோட்டத்து விறகை மட்டுமே எரிபொருளாக்கும், மண் அடுப்பு... அடித்து துவைக்க சாய்நிலையில் ஒரு பெரிய கருங்கல்.... அதில் துணி துவைக்கும் போது மேலே தண்ணீர் தெளிக்கும் சுகத்திற்காக அடிக்கடி துணி துவைக்கும் நேரத்தில் அந்த பக்கம் சென்று திட்டு வாங்கிய நினைவுகள்....

எல்லாம் சில வருடம்தான் வாய்த்தது. பின்னர் சில காலத்திற்கு, பொங்கல், நோன்பு, தாத்தா மற்றும் ஆயாவின் நினைவு நாட்களின் போது, பூந்தமல்லி வீட்டிற்கு எல்லா உறவினர்களும் வந்து, 50-70 பேர் சத்தமும், வகையான வாழையிலை சாப்பாடும், சிரிப்புகளும்...... எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்த காலம்..... நினைத்தாலே இனிக்கும்...

இன்று, நினைவுகள் மட்டும்தான்... உறவுகள் வெகு தூரத்தில்....

நிச்சயமாக கடந்த 5- 6 வருடங்களாக அந்த திண்ணைகள் யாரையும் பார்த்திருக்காது.... இனியும் அது யாரையும் பார்க்காது.... எனது மகனுக்கு கட்டாயம் திண்ணை என்றால் என்ன என்று புரியாது


திண்ணைக்கு இரங்கற்பா!

நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...
நாங்கள் எங்களை தொலைத்து எங்கோ ஓடிக்கொண்டிருப்பவர்கள்....
உன்னை நினைத்து கண்களில் ஈரமும், இதழில் புன்னகை பூப்பதையும் தவிர
உருப்படியாய் எதுவும் செய்யமுடியாது...
எங்களால் நகரத்தின் வசதி இன்றி நாட்களை நகர்த்த முடியாது..
நீ தந்த நினைவுகளுக்கு நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...



வினையூக்கிகள் (catalysts)
http://blog.balabharathi.net/திண்ணை/

ரொம்ப பிடிச்சது...
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

Tuesday, July 1, 2008

க்ரிக்கெட்

க்ரிக்கெட் - பள்ளி நாட்கள் முதலே ஏதோ இந்த விளையாட்டு மீது ஒரு தனி பிரியம்... வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுனா, அப்பா டென்ஷன் ஆவார். என்னுடைய க்ரிக்கெட் மோகம் எல்லாம் வாரம் ஒரு முறை 10 ரூபாய்க்கு அல்லது 7 ரூபாய்க்கு டென்னிஸ் பந்து இல்லைன்னா பெப்சி பந்து வாங்கி மொட்டை மாடியில் என்னுடைய தம்பியோட சேந்து, 10 நிமிடம் விளையாடி, பக்கத்து வீட்டில் தொலைத்த நிகழ்வுகள்தான்... அட இப்ப இல்லங்க... 15 வருடத்துக்கு முன்ன....

10ஆவது வரும் போது, கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் க்ரிக்கெட் வீரர்களாக தோற்றமளிக்க... நானும் முயற்சித்தேன்... எங்க பள்ளி க்ரவுண்டில் முதல் முறை பெட்டிங் மேட்சில் என்னையும் சேர்த்த புண்ணியத்துக்காக, விக்கட் கீப்பரா நிக்க வெச்சாங்க.... பந்து நேரா வந்து.. நெஞ்சில் படார்னு பட்டது... ஒரு ரெண்டு நிமிஷம் மூச்சு நின்றது போல வலி... ஐ ஆம் ஓ.கே ன்னு பந்தா விட்டுட்டு, தண்ணி குடிக்க போரா மாதிரி ஒரு கால் மணி நேரம் எஸ்கேப் ஆனேன்...

அடுத்த கட்டமாக, பள்ளிக்கூட க்ரவுண்டு சின்னதா இருக்குன்னு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் லா-கலேஜ் க்ரவுண்டுக்கு அப்பப்ப விளையாட செல்லும் பசங்க... ஆள் குறைவா இருந்தா... என்னையும் அன்போடு கூப்பிடுவாங்க... அங்க நம்ம லா அண்ணண்கள் எங்களிடம் தங்கள் திறமையை சில சமயம் காண்பிப்பார்கள்... சும்மா ஒரு ஓவர் டானு பேட் வாங்கி கண்ணா பிண்ணானு அடிச்சு எப்படின்னு ஒரு புன்னகை... சரி நீ பேட்டிங் பண்ணுனு சொல்லிட்டு, நாம அவுட் ஆனதும் பெரிய சிரிப்பு... அண்ணா, சூப்பர்னா னு நாங்களும் சொல்லிடுவோம்..

எல்லா விஷயங்களையும் போலவே... வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் சுலபமாக தெரியும் க்ரிக்கெட் விளையாட ரொம்ம்ம்ம்ம்ம்ப்பபப கடினமாகவே தோன்றியது.... slow ball தானேனு மெதுவா விளையாடினா... கண்ணதிரே நம்மை தாண்டி பந்து போறது, ஒரு மாதிரி நெஞ்சை கசக்கும்... ஈசி ஈசி னு சொல்லி ரொம்ப முயற்சி பண்ணா, அடுத்த பாலே வேகமா போட்டு அவுட்னு சொல்லிடுவாங்க.. ;(


கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ராஜூ பேட் எப்படி பிடிக்கனும்னு கத்து கொடுத்தான்.. (டாங்க்ஸ் டா, அதுக்கு முன்னாடி கூட விளையாட கூப்புட்டவங்க எல்லாமே பவுண்டரி பக்கத்துல இருந்து பால் தூக்கி போடவும், கொஞ்சமாய் காமடி பண்றதுக்கும்தான் அப்படிங்கறது ரொம்ப நாள் கழிச்சு புரிஞ்சுது)

பிரபு, ராஜூ எல்லாம் பந்தை தூக்கி போட்டு காட்ச் ப்ராக்டிஸ் பண்ண... நான் மட்டும் நண்டு பிடிக்கும் ஸ்டைலில் விரலை எல்லாம் விரித்து பந்தை பார்த்து நகர்ந்தாலும், சரியா முகத்து மேலே விழுந்தோ, கைக்கு நடுவில் ஓடியோ, ஒரு பவுன்ஸ் ஆகி வேறு திசையிலோ போய்.. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈகோவையும் சுத்தமாக பிரித்தெடுக்கும்.

ஒரு பத்து அடி தூரம் மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் சின்ன பசங்க கூட விளையாடுறதுன்னா, நாங்க கலக்குவோம்ல.. ;) விரல வெச்சு பந்தை சுத்தி தூஸ்ரா போடரது... ச்சின்ன பசங்க போடுற பந்தை இலாவகமா ப்லேஸ் பண்ணி ரன்ஸ் எடுக்குறது.. ஒன் பிட்ச் கேட்ச் பிடிக்கிறது... இத விட என்னோட கேமை அடுத்த லெவலுக்கு கொண்டு போகவே முடில...

இன்றும், அவ்வப்போது நண்பர்கள் க்ரிக்கெட் விளையாட கூப்பிடுவார்கள்... ஒரு ஆர்வத்தில் போய் விடுவேன்... எவ்வளவு ட்ரை பண்ணாலும், பல்ப் தான்...

மேட்ச் பாக்கும் போது, நம்ம க்ரிக்கெட் வீரர்களை வீட்டில் உள்ளவர்கள் திட்டினால்... (அட ஈசி ஷாட் , ஈசி கேட்ச், எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் வராங்க.. etc., etc.,) நான் மட்டும் தனி கட்சி... அங்க போய் விளையாடுனாத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம்னு... ;)