Tuesday, July 8, 2008

திண்ணை

திண்ணையை பற்றி பதிவர் வட்டத்தை சேர்ந்த பலரும் மிக அழகாக எழுதியதை படித்த தாக்கம், இளகிய இதயத்துடன் இன்றைய கிறுக்கல்கள்....

பூந்தமல்லியில் தாத்தா வீடு - 40 களில் கட்டியதாம்.... வீட்டை சேர்ந்தால் போல 2 திண்ணையும், கொஞ்சம் மதில் சுவர் சேர்ந்தால் போல 2 திண்ணையும் இருக்கும் ^\___ ... நான் முதல் வகுப்பில் இருந்த வரை பூந்தமல்லியில் வாழ்ந்ததாக மென்மையான நினைவுகள்.. திண்ணைக்கு எதிரே நித்தியமல்லி கொடி படர்ந்திருக்கும். தாத்தா வீட்டில் பெரிய முற்றம் கிடையாது... கடன் வாங்காமல் கட்டனும்னு சின்னதா கட்டியதாக, தாத்தா சொன்னதாக, என்னுடைய பெரிய அத்தை சொல்வார். இரு திண்ணைக்கும் இடையே மாடங்களோடு சேர்ந்த ஒரு பெரிய கதவு... கதவின் மேல் நின்று அதை திறந்து விளையாடி அதற்காக உதை வாங்கியது போல் லேசாக நினைவு... பின்வாசல் வழியே நேராக செல்லும் பாதையை முட்டும் வகையில் பெரிய கிணறு... கல் கிணறு... அதில் வாளி கயிறு வழியாக சர்ரென இறங்குவதும், வாளி தண்ணிரில் விழும் சத்தமும், ஏதோ ஒரு அழகு... .

பின்னால் உள்ள தோட்டத்தில், புளிய மரம், அரை நெல்லிக்காய், பூவரசம், செம்பருத்தி, 2 தேக்குமரம், ரொம்ப பிடிச்ச கொன்றை மரம், வாழை மற்றும் தென்னையோடு சுற்றிலும் ஆடாதொடாவும், வேலிக்காத்தானும்.. ஒவ்வொரு செடியும் அழகு....

வீட்டிற்கு பின்னால் உள்ள நிலத்தில் பெரிய புங்கமரமும், கொர்கொலிகாய் மரமும், பம்ப்செட்டுடன் சேர்ந்த கிணரும் இருந்ததாக நினைவு... எல்லாமே அழகு...

மார்கழி மாதம் வந்தால், புல் எல்லாம் வெட்டி, வீட்டின் முகப்பில் சாணம் கலந்த நீர் தெளித்து, கோலம் போடும் அழகு... தோட்டத்து விறகை மட்டுமே எரிபொருளாக்கும், மண் அடுப்பு... அடித்து துவைக்க சாய்நிலையில் ஒரு பெரிய கருங்கல்.... அதில் துணி துவைக்கும் போது மேலே தண்ணீர் தெளிக்கும் சுகத்திற்காக அடிக்கடி துணி துவைக்கும் நேரத்தில் அந்த பக்கம் சென்று திட்டு வாங்கிய நினைவுகள்....

எல்லாம் சில வருடம்தான் வாய்த்தது. பின்னர் சில காலத்திற்கு, பொங்கல், நோன்பு, தாத்தா மற்றும் ஆயாவின் நினைவு நாட்களின் போது, பூந்தமல்லி வீட்டிற்கு எல்லா உறவினர்களும் வந்து, 50-70 பேர் சத்தமும், வகையான வாழையிலை சாப்பாடும், சிரிப்புகளும்...... எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்த காலம்..... நினைத்தாலே இனிக்கும்...

இன்று, நினைவுகள் மட்டும்தான்... உறவுகள் வெகு தூரத்தில்....

நிச்சயமாக கடந்த 5- 6 வருடங்களாக அந்த திண்ணைகள் யாரையும் பார்த்திருக்காது.... இனியும் அது யாரையும் பார்க்காது.... எனது மகனுக்கு கட்டாயம் திண்ணை என்றால் என்ன என்று புரியாது


திண்ணைக்கு இரங்கற்பா!

நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...
நாங்கள் எங்களை தொலைத்து எங்கோ ஓடிக்கொண்டிருப்பவர்கள்....
உன்னை நினைத்து கண்களில் ஈரமும், இதழில் புன்னகை பூப்பதையும் தவிர
உருப்படியாய் எதுவும் செய்யமுடியாது...
எங்களால் நகரத்தின் வசதி இன்றி நாட்களை நகர்த்த முடியாது..
நீ தந்த நினைவுகளுக்கு நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...வினையூக்கிகள் (catalysts)
http://blog.balabharathi.net/திண்ணை/

ரொம்ப பிடிச்சது...
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

10 comments:

ராமலக்ஷ்மி said...

என் பதிவில் கலங்கிய கண்களுடன் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டேன் உங்கள் நினைவுகளையும் தட்டி எழுப்பி விட்டேன் என.

திண்ணைக்கான "இரங்கற்பா" -என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வணங்கி வழி மொழிகிறேன்.

//இனியும் அது யாரையும் பார்க்காது.... //

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் கொடுத்து வைத்திருக்கிறேன். என்னை அது பார்க்கிறது. என் பெரியப்பா இன்னும் அந்த வீட்டில் வசித்து வருவதால்..

உங்கள் பெரியத்தை நலம்தானா:))?

//வீட்டிற்கு எல்லா உறவினர்களும் வந்து, 50-70 பேர் சத்தமும், வகையான வாழையிலை சாப்பாடும், சிரிப்புகளும்//

எங்கள் வீடும் ஈஸியாக இத்தனை பேருக்கு ஈடு கொடுக்கும்.ஜீவ்ஸ் கூறியது போல "அது ஒரு அழகிய நிலாக்காலம்!" கனவிலும் நினைவிலும் உலாப் போகும் போதுதான் உள்ளம் மருகுது:((!

//கதவின் மேல் நின்று அதை திறந்து விளையாடி அதற்காக உதை வாங்கியது போல் லேசாக நினைவு... அட அதை மறந்திட்டேனே!//

குறுக்கு வாக்கிலே 'அடியில் நடுவில் மேலே' என மூணு மூணு குமிழ்களுடனான carved protrusion கொண்ட கனமான கதவுகள். அதில் ஏறி மெரிகோ (ஹாஃப்) ரவுண்ட் போவோம். நமக்கெல்லாம் எதுக்குங்க சில்ரன்ஸ் பார்க்?

"ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டா இங்கேயும் வந்து மறுபடியும்..ஆரம்பிச்சு...." என யாரும் சொல்வதற்குள் இத்துடன் முடிக்கிறேன்:)).

அப்புறம் ஒரு வேண்டுகோள். உங்கள் எண்ணங்கள் எழுத்தாகையில் அற்புதமாக இருக்கின்றன. அதை கிறுக்கல்கள் எனக் குறிப்பிட வேண்டாமே! வாழ்த்துக்கள் natty!

sury said...

//திண்ணைக்கு இரங்கற்பா!

நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...
நாங்கள் எங்களை தொலைத்து எங்கோ ஓடிக்கொண்டிருப்பவர்கள்....
உன்னை நினைத்து கண்களில் ஈரமும், இதழில் புன்னகை பூப்பதையும் தவிர
உருப்படியாய் எதுவும் செய்யமுடியாது...
எங்களால் நகரத்தின் வசதி இன்றி நாட்களை நகர்த்த முடியாது..
நீ தந்த நினைவுகளுக்கு நன்றி.... நன்றியில்லா எங்களை மன்னித்திடு...//

திண்ணைக்கு ஒரு இரங்கற்பாவா ?

ஊர்க்கோடியில் ஒடும் வாய்க்காலும்
அதன் கரையிலே எழுந்த ஆல மரமும்
ஆலமரத்தின் அடியிலே அமர்ந்த அந்தப்
பிள்ளையாரும்
யாரும் தனக்கு நன்றி செலுத்தவேண்டுமென‌
எதிர்பார்ப்பதில்லை.

அவை எல்லாம் தலையாலே தான் தரும் தென்னை மரங்கள்.
எவை எல்லாம் தன்மேல் படுத்தன, உட்கார்ந்தன,
நின்றன, ஓடின, விளையாடின என்ற கணக்கெல்லாம்
திண்ணைகள் போடுவதில்லை.
அதெல்லாம் திண்ணையிலே அமர்ந்து
விண்ணை முட்ட வம்புப்பேச்சு பேசிடும்
வீணரின் விளையாட்டு.


அப்படி ஒரு கணக்கும் இருந்தால்
அது என்றோ அழிக்கப்பட்டிருக்கும்
அது தன்னைத் தானே க்ளீன் செய்து கொள்ளும்
மென் பொருள். ஆகவே
கவலை வேண்டாம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

Natty said...

நன்றி ராம்ஸ்.... அனுபவித்தால் மட்டுமே புரியும் ஆனந்தங்கள்... நினைவுகள்.... இந்த பதிவு முழுக்க முழக்க , உங்களுடைய திண்ணை பதிவின் தாக்கம் மட்டுமே....

Natty said...

சுப்பு சார்,
நன்றி வருகைக்கும் கருத்துகளுக்கும்... உங்களுக்கு என்ன சார்.. தஞ்சையில் இருக்கீங்க.. கொடுத்து வைச்சவங்க...அடிக்கடி திருச்சி பக்கம் வருவதுண்டு, அங்கே நிறைய விஷயங்கள் இன்னும் இயல்பாகவே இருக்கிறது.. .மாற்றங்களின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது..... சென்னையிலும், சுற்றுப்புறத்திலும், ஓட்டு வீடு, தோட்டம், மெட்ராஸ் கூரை என்று அழைக்கப்படும் வீடு, எல்லாம் காணா போயிடுச்சு..நாங்க வெட்டி வேலை பாக்க, அமெரிக்காவில் இருக்கும் போது, நினைவுகள் தரும் மகிழ்ச்சியில் இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறோம் ;-)

விஜய் said...

அமெரிக்காவில் இருந்து பழைய திண்ணையின் நினைவுகளின்
அருமைத் தகவல்களை உணர்வின் உயிர்ப்போடு பதிந்தற்கு

பாரட்டுக்கள்.

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

விஜய் said...

Natty said...
தமிழ் வலைப்பதிவுகளில் மொக்கை, காமடி, நுண்ணரசியல் எல்லாமே அழகுதான், ஆனால், பயனுள்ளதாக இருக்கும் பதிவுகள், என்ற வகையில் உங்களுடைய இந்த பதிவு சூப்பர். மனமார்ந்த வாழ்த்துக்கள்....

பி. கு. மரம் நடும் ஆர்வம் உள்ள வலை நண்பர்கள் அரசு வனத்துறையை தொடர்பு கொண்டாலே, அவர்களே ஆவன செய்வார்கள்.. பராமரிப்பு மட்டும் நாம் ஏற்றுக்கொண்டாலே போதும்....

யோகநாதனுக்கும், உங்களுக்கும், நல்லன செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...


அருமையான தகவலை அதுவும் "மரம் நடுவதைப் பற்றி பருவ மழை தவிறிய இக்கால கட்டத்தில்

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

Natty said...

நன்றி விஜய்.... வருகைக்கும், கருத்துகளுக்கும்....

புனித் கைலாஷ் said...

மிகவும் அழகான பதிவு ங்க! நானும் சென்ற தலை முறையிலே பிறந்து வளர்ந்து இருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு.. இப்போது இதை படித்த உடன், இன்னும் அதிகம் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்! நீங்கள் எல்லாம் எத்துனை அருமையாக வளர்ந்து இருக்கீங்க! நானெல்லாம், தண்ணீரின் குளிர்ச்சி என் மீது பட்டு ஆற்றங்கரை உணர்வு வருவதற்கு, "காதல் சிறகை காற்றினில் விரித்து வான விதியில் பறக்கவா,?" என்று பாடலை பாடி கொண்டே, வாஷிங் மிஷன் உள் கை விட்டு துணிகளை உழற்றி கொண்டு வளர்ந்தவள்!
தாவணி கட்டி திண்ணையில் அமர்ந்து தமிழ் நாவல்கள் படித்து கொண்டு, பழைய பாடல்கள் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்பது என் கனவு!//நாங்கள் எங்களை தொலைத்து எங்கோ ஓடிக்கொண்டிருப்பவர்கள்....//

ரொம்ப கசப்பான உண்மை ங்க!

அன்புடன்,
புனித்

மங்களூர் சிவா said...

அழகான நினைவுகள்.

இன்னும் சிறிது காலத்திற்கு பின் திண்ணையை இது போன்ற பதிவுகளில் மட்டும்தான் பார்க்க முடியும்.

Natty said...

கட்டும் வீட்டில், இலட்ச இலட்சமாய் செலவு செய்து, etched glasses, chinese vasthus, வைக்கும் நம்மவர்கள்... திண்ணையையும், ஊஞ்சலையும், மர தூண்களை... (dummy) வைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள்... ஆனால், அது வழிபோக்கர் இளைப்பார அல்ல...